தீர்க்கதரிசியாக இருந்த ரத்தன் டாடா தனது மறைவுக்குப் பின்பு தன்னுடைய சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும்..? எப்படிச் செலவிடப்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே உயில் எழுதிவிட்டு மறைந்துள்ளார்.
அக்டோபர் 9ஆம் தேதி தனது 86 வயதில் உடல் நலக்குறைவால் மறைந்தார் ரத்தன் டாடா, இவருடைய மறைவிற்கு பின் டாடா குழுமத்தில் பல உயர் மட்ட கூட்டங்களும், டாடா டிரஸ்ட் தலைமை பொறுப்புகளும் மாற்றப்பட்ட நிலையில் தற்போது அவருடைய உயில் விஷயம் வெளியாகியுள்ளது.

ரத்தன் டாடாவின் சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ளது. அவரது சொத்துக்களில் மும்பை அலிபாக்-ல் 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கடற்கரை பங்களா, மும்பையின் ஜூஹு தாரா சாலையில் 2 மாடி வீடு, ரூ.350 கோடியைத் மதிப்பிலான வைப்புத்தொகை மற்றும் 165 பில்லியன் டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் 0.83% பங்கு ஆகியவை அடங்கும்.
பங்குகள்: டாடா சன்ஸில் ரத்தன் டாடா வைத்திருந்த 0.83% பங்கினை, அவர் பெயரில் இயங்கும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு (RTEF) மாற்றப்படும். டாடா குழுமத்தின் வழக்கமான கட்டமைப்பிலேயே ரத்தன் டாடா தனது பங்குகளை அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளார்.
வீடுகள்: ரத்தன் டாடாவின் குடியிருப்புக்கள் குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. கோலாபாவில் உள்ள ஹலேகை வீடு (Halekai house) தற்போது டாடா சன்ஸின் துணை நிறுவனமான எவார்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் உடைமையில் உள்ளது. Halekai house-ல் தான் ரத்தன் டாடா தனது உயிரை விட்டார்.
ரத்தன் டாடா மற்றும் அவரது குடும்பத்தினர் ஜூஹு வீட்டை பெற்றுள்ளனர். அலிபாக் வீடு குறித்து தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கார்கள்: ரத்தன் டாடா மிகப்பெரிய கார் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ரத்தன் டாடா சேகரித்து வைத்திருந்த 20-30 கார்களின் பிரமாண்டமான தொகுப்பு தற்போது ஹலேகை வீட்டிலும், கோலாபாவில் உள்ள தாஜ் வெலிங்டன் மியூஸ் சேவை அபார்ட்மெண்டுகளிலும் உள்ளன. இந்த கார்களை டாடா குழுமம் தனது புனே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தலாம் அல்லது ஏலம் விடலாம்.
உயிலை செயல்படுத்துவது யார்?: ரத்தன் டாடாவின் உயிலின் படி தனது விருப்பத்தின் நிறைவேற்றுபவர்களாக அவருடைய வழக்கறிஞர் தாரிஸ் கம்பதா, நீண்ட கால நண்பரான மெஹ்லி மிஸ்ட்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த இரண்டு பேருடன் ரத்தன் டாடாவின் சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீன்னா ஜெஜீபாய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டாடா சன்ஸில் 66% பங்குகளை வைத்திருக்கும் சர் டோராபிஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகிய இரண்டு முக்கிய டாடா அறக்கட்டளைகளின் நிர்வாகியாகவும் மெஹ்லி மிஸ்ட்ரி உள்ளார்.
ரத்தன் டாடாவின் மறைவால், டாடா குழுமத்தின் தலைமைப் பதவி அவரது அரை சகோதரர் நோயல் டாடாவுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது டாடா டிரஸ்ட்-ன் தலைவராக உள்ளார்.


Click it and Unblock the Notifications