மும்பை: அண்மையில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நெருங்கிய நண்பரான சாந்தனு நாயுடு மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் கடைசி காலத்தில் நெருங்கிய நண்பராகவும் அவருடைய மேலாளராகவும் இருந்தவர் தான் சாந்தனு நாயுடு. டாடாவின் மறைவு சாந்தனு நாயுடு நாயுடுவை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பாக அமைந்தது . ரத்தன் டாடா மறைந்து சில மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சாந்தனு நாயுடு ஒரு புதிய திட்டத்தை முன்னெடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். புக்கீஸ் (Bookies) என்ற பெயரில் ஒரு புதிய ப்ராஜெக்டை தொடங்கியுள்ளார். Bookies என்பது மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு திட்டமாகும். இதன்படி ஒரு பொது இடத்தில் அனைவரும் தங்களின் புத்தகங்களோடு வந்து அமைதியான முறையில் அவற்றை வாசிக்க வேண்டும்.
முதன்முறையாக மும்பையில் இந்த Bookies திட்டத்தை சாந்தனு நாயுடு தொடங்கினார். மும்பையில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து புனே மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களிலும் இதனை அவர் விரிவுபடுத்தி உள்ளார். இந்த நகரங்களில் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்ததை அடுத்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டிசம்பர் 8ஆம் தேதி அன்று Bookies திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தன்னுடைய லிங்குடின் பக்கத்திலும் அவர் பதிவு செய்துள்ளார் . தொடர்ந்து டெல்லி, கொல்கத்தா ,அகமதாபாத், சூரத் ஆகிய நகரங்களிலும் புக்கீஸ் கூட்டத்தை நடத்த இருப்பதாக அவர் கூறியுள்ளார். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே மீண்டும் கொண்டு வருவதே தன்னுடைய நோக்கம் என கூறியிருக்கும் சாந்தனு நாயுடு புத்தகம் படிப்பது நமக்கு புதுவித அனுபவத்தை தருகிறது ஒரு விஷயத்தில் ஆழ்ந்த கவனத்தை செலுத்துவதில் நமக்கு உதவுகிறது என கூறியுள்ளார்.
இப்போது நாம் குறுகிய ரீல்ஸ்களை மட்டுமே பார்க்கிறோம் ,முழு வீடியோவை பார்க்கும் அளவுக்கு கூட நம்மிடம் பொறுமை இல்லை என கூறும் சாந்தனு நம்முடைய கவன திறனே குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாடா தன்னுடைய கடைசி காலங்களில் துணையாக இருந்த சாந்தனு நாயுடுவை தன்னுடைய உயிலிலும் குறிப்பிட்டிருந்தார். சாந்தனு நாயுடுவின் கல்வி கடனை தள்ளுபடி செய்வது, Goodfellows என்ற கூட்டு நிறுவன பங்குகளை வழங்குவது என்பன உள்ளிட்டவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications