முன்னணி ஜவுளி மற்றும் துணி உற்பத்தியாளரான ரேமண்ட் லிமிடெட் வியாழனன்று, அதன் பங்குதாரரான கவுதம் ஹரி சிங்கானியாவை நிர்வாக இயக்குநராக மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனடிப்படையில் கவுதம் ஹரி சிங்கானியா மீண்டும் தனது பணியை ஜூலை 1ஆம் தேதி முதல் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 27-ஆம் தேதி அன்று நடைபெற்ற ரேமண்ட் லிமிடெட் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் (AGM) நிறுவனத்தின் பங்குதாரர்கள் சிங்கானியாவை மீண்டும் நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் சிங்கானியா ஏப்ரல் 1, 1990-ஆம் ஆண்டு முதல் ரேமண்ட் குழுவில் உள்ளார். FY24-இல், சிங்கானியா சுமார் ரூ. 20 கோடி ஊதியம் பெற்றார். இது ரேமண்டின் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட கிட்டத்தட்ட 500 மடங்கு அதிகம்.
இவரது மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவுக்கும் இவருக்குமான விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த மறுநியமனம் நடைபெற்றுள்ளது. நவாஸ் மோடி சிங்கானியா, நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த சமயம், நிறுவன பணத்தை கவுதம் சிங்கானியா தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டினார்.
ஆனால், ரேமண்ட் நிறுவனம், கவுதம் சிங்கானியாவின் தலைமையில் நிறுவனம் பெரும் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அவர் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளில் ஒன்றாக, ரேமண்ட்டை உலக சந்தையில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உழைத்தார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கானியாவின் தற்பதைய பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நவாஸ் மோடி சிங்கானியா அவரது மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை வைத்த பின்னரும் இந்த மறுநியமனம் நடைபெற்றுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பங்கு ஆலோசனை நிறுவனமான இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டர் அட்வைசரி சர்வீசஸ் இந்தியா, ரேமண்டின் இயக்குநர்களிடம், குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும், விசாரணை முடியும் வரை இடைக்கால தலைமை செயல் அதிகாரியை நியமிக்கவும் வலியுறுத்தியது. அனால் நிறுவனம் தற்போது கவுதம் ஹரி சிங்கானியாவை நிர்வாக இயக்குநராக மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையில், ரேமண்ட் நிறுவனம், மார்ச் காலாண்டில், அதன் நிகர லாபம் 18% அதிகரித்து ரூ.229 கோடியை எட்டியது என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.194 கோடி லாபம் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளது. இது அனைத்து வகையான வணிகங்களிலும் வலுவான வளர்ச்சியைக் குறிக்கிறது.


Click it and Unblock the Notifications