ரிசர்வ் வங்கி (RBI) பணவியல் கொள்கைக் குழுவின் கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று (அக்.1) முடிவடைந்தது. இந்த கூட்டத்திற்குப் பிறகு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "அடிப்படைச் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு (BSBDA) இனி டிஜிட்டல் வங்கிச் சேவைகளும் (மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங்) குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டணமின்றி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் வங்கிச் சேவைகளும் இலவசம்: 'BSBDA' கணக்கு என்பது, குறைந்தபட்ச இருப்புத் தேவையின்றி, அனைத்து அடிப்படை வங்கி வசதிகளையும் இலவசமாக வழங்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சேமிப்புக் கணக்கு ஆகும். ஏற்கனவே இந்தக் கணக்குகளில் ரொக்க வைப்புகள் மற்றும் எடுப்புகள், மின்னணுப் பரிமாற்றங்கள் மூலம் நிதி வரவு, வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களில் காசோலைகளை செலுத்துதல் உள்ளிட்ட பல சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வங்கிகள் துறையில் நடந்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, 'BSBDA' கணக்குகளுக்கான நடைமுறை விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் வங்கி வசதிகளை அளிப்பதையும், நிதி உள்ளடக்கத்தை ஆழப்படுத்த இந்த கணக்குகளின் பயன்பாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
BSBDA கணக்குகள் குறித்த முக்கிய விதிகள் : சேமிப்புக் கணக்கு : ஒரு வங்கியில் BSBDA கணக்கு வைத்திருப்பவர் அதே வங்கியில் வேறு எந்தச் சேமிப்புக் கணக்கையும் வைத்திருக்க முடியாது. அதே வங்கியில் ஏற்கனவே வேறு ஏதேனும் சேமிப்புக் கணக்கு இருந்தால், BSBDA கணக்கைத் திறந்த 30 நாட்களுக்குள் அதைக் கட்டாயம் மூட வேண்டும்.
Mutual Fund முதலீட்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும்? இதை பாருங்க
ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு : வங்கிகள் BSBDA கணக்குகளுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகளை இலவசமாக வழங்க வேண்டும். மேலும் இந்தக் கார்டுகளுக்கு வருடாந்திரக் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது. மேலும், ஏடிஎம் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர் எழுத்துப்பூர்வமாகக் கோரினால் மட்டுமே வழங்க வேண்டும்; கட்டாயம் ஏற்றுக்கொள்ளும்படி வங்கிகள் வற்புறுத்தக் கூடாது.
ஏடிஎம் திரும்பப் பெறுதல் வரம்பு : BSBDA கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 இலவச திரும்பப் பெறுதல் எண்ணிக்கையில், ஏடிஎம்களில் இருப்புத் தொகையைச் சரிபார்ப்பதை எண்ணக் கூடாது.
BSBDA-சிறிய கணக்குகளுக்கான நிபந்தனைகள் : அரசாங்க அறிவிப்பின்படி, சில கூடுதல் கட்டுப்பாடுகளுடன் 'BSBDA-சிறிய கணக்குகள்' வழங்கப்படுகின்றன. இந்தக் கணக்குகளில் ஒரு வருடத்தில் உள்ள மொத்த வரவுகள் ரூ.1 லட்சம் தாண்டக் கூடாது. கணக்கில் எந்த நேரத்திலும் இருக்கும் அதிகபட்ச இருப்புத் தொகை ரூ.50,000-ஐ தாண்டக்கூடாது.
ரொக்கத் திரும்பப் பெறுதல் மற்றும் பரிமாற்றங்கள் மூலம் ஒரு மாதத்தில் மொத்தமாக ரூ.10,000-க்கு மேல் எடுக்கக் கூடாது. சாதாரண KYC நடைமுறைகளை முடிக்காமல் வெளிநாட்டில் இருந்து வரும் பணம் இந்தக் கணக்குகளில் வரவு வைக்கப்படாது. இந்தக் கணக்குகள் தொடக்கத்தில் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும், மேலும், முறையான ஆவணங்களுக்கான ஆதாரத்தை விண்ணப்பதாரர் வழங்கினால் மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த கணக்குகளை CBS-இணைக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் அல்லது நிபந்தனைகளை சிறப்பாக கண்காணிக்கக்கூடிய கிளைகளில் மட்டுமே திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications