இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நாணய கொள்கை குழு (MPC) வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகவே அறிவித்துள்ளது. வட்டி விகிதம் குறைக்காமல் இருப்பதற்கு நாணய கொள்கை குழுவில் ஆதரவாக 4 உறுப்பினர்களும், எதிர்த்து 2 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.
இதன் மூலம் நாணய கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி உள்ளது. இதன் மூலம் 16 மாதங்களாக இந்தியாவில் ரெப்போ விகிதம் 6.50 சதவீதம் என்ற நிலையில் மாறாமல் உள்ளது.

ரெப்போ விகிதம் என்றால் என்ன? : ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்குக் கடன் வழங்கும் விகிதமே ரெப்போ விகிதம் ஆகும். இந்த ரெப்போ விகிதத்தை அடிப்படையாகக் கொண்டே வணிக வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குகின்றன.
எனவே, ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வணிக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் வட்டி விகிதமும் குறையும், பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல், ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டால், கடன் பெறும் வட்டி விகிதம் அதிகரிக்கும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்.
தற்போது ரெப்போ விகிதம் மாற்றாமல் ஆர்பிஐ தனது கணிப்புகளை வெளியிட்டுள்ள காரணத்தால் வீட்டுக்கடன் வாகன கடன் வாங்கியோரின் வட்டி விகிதம் உயராமல் தற்போது இருக்கும் ஈஎம்ஐ தொடரும். இதேபோல் வைப்பு நிதியின் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது.
முடிவின் பின்னணி என்ன?: ஆர்பிஐ 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமின்றி அறிவிக்க முக்கியமான காரணமாக, எரிபொருள் விலை குறைவு தொடர்ந்து வந்தாலும், உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பாதையைத் தாமதப்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக வட்டி விகிதத்தைக் குறைக்காமல் ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிட்டு உள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு அபாயங்களைக் கண்காணித்து வருவதாகவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார். பணவீக்கத்தை 4 சதவீதம் என்ற இலக்குக்குக் கொண்டு வருவதில் ரிசர்வ் வங்கி உறுதியாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்.
பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?: ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நகர்ப்புற பகுதிகளில் மக்கள் அதிகப்படியாக செலவு செய்து வரும் காரணத்தால் தனியார் நுகர்வு மீண்டும் உயர்ந்து வருகிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்தார். மேலும், முதலீட்டு நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
2024-25 நிதிய ஆண்டிற்கான உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி 7 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தென்மேற்கு பருவமழை சாதாரண அளவிற்கு அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது. இதன் காரணமாக காரிப் பருவ காலததில் விவசாய பொருட்களின் விளைச்சல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நாணய கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகளை வெளியிடும் வேளையில் பங்குச் சந்தை (Sensex) 600 புள்ளிகள் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications