நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா 2026-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து மக்கள் மத்தியில் ஒரே ஒரு பேச்சு தான்.. ஆட்குறைப்பு! இதுவரை இல்லாத வகையில் ரிசர்வ் வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்திருப்பது வருடாந்திர அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. RBI இந்த நடவடிக்கையை எடுத்திருப்பது கடந்த 6 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்றும் சொல்லப்படுகிறது.
ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் குறைக்கப்பட்டால் செலவுகள் குறைய வேண்டும் அல்லவா? ஆனால் அதற்கு நேர் மாறாக ஆர்பிஐ ஊழியர்களுக்கு செய்யும் செலவு மட்டும் டபுள் டிஜிட்டாக மாறி இருக்கிறது. இதன் பின்னணியில் என்ன காரணம் இருக்கிறது? என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
2020-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியில் மொத்தமாக 12,276 ஊழியர்கள் இருந்தனர். அதன் பிறகு படிப்படியாக இந்தியா டிஜிட்டல் மையமாக மாறியது. இதன் காரணமாக பணியாளர்களின் எண்ணிக்கையும் கூடியது. இதனால் 2024-ஆம் ஆண்டில் ஊழியர் எண்ணிக்கை 13,520-ஆக மாறியது. கடந்த 2025-ஆம் ஆண்டின் டிசம்பர் 31 நிலவரப்படி ஆர்பிஐ-யில் 13,220 ஊழியர்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடன் 5 வருடங்களில் ஏறுமுகத்தில் இருந்த பணியாளர் சேர்க்கை முதன் முறையாக சரிவைச் சந்தித்திருக்கிறது. சுமார் 2.2% வரை ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.

பிற அரசாங்க பணிகளில் இருப்பதைப் போலவே ஆர்பிஐ-யிலும் கிளாஸ் 1, கிளாஸ் 3 மற்றும் கிளாஸ் 4 என 3 பிரிவுகளில் பணியாளர்கள் இருக்கின்றனர். அதில் கிளாஸ் 1-இன் கீழ் 7,517 பணியாளர்களும், கிளாஸ் 3-இன் 3206 பணியாளர்களும், கிளாஸ் 4-இன் கீழ் 2,497 பணியாளர்களும் இருக்கின்றனர். இந்த ஆண்டு கிளாஸ் 3 மற்றும் கிளாஸ் 4-இல் சேர்க்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் கிளாஸ் 1-ல் இருந்த பணியாளர் எண்ணிக்கை 7,325-லிருந்து 7,517-ஆக அதிகரித்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் 247 ஊழியர்கள் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 2024-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 604-ஆக இருந்தது. சரி பணிக்கு வருபவர்கள் குறைய தொடங்கினால் செலவும் குறையும் தானே. ஆனால் அதற்கு நேர் மாறாக ரிசர்வ் வங்கியில் செலவு அதிகரித்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் ஆர்பிஐ ஊழியர்களுக்கு செய்த மொத்த செலவு ரூ.9,146.71 கோடியாக இருந்தது. ஆனால் 2026-ஆம் நிதியாண்டில் 10.8% உயர்ந்து ரூ.10,136.31 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த செலவு அதிகரிப்புக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று புதிய ஓய்வூதிய முறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள், மற்றொன்று ஆர்பிஐ ஓய்வூதிய நிதிக்காக வழங்கிய கூடுதல் பங்களிப்பு. இதனால் தான் முன்பை விட தற்போது செலவு அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சில காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை தடுப்பதற்காகவும் ஆர்பிஐ முதலீடுகளை செய்து வருகிறது. ஃபின்டெக் நிறுவனங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மையமாக்க செயல்பட்டு வருகின்றன. அப்படி இருக்கையில் மத்திய வங்கியாக இருக்கும் ஆர்பிஐ எவ்வளவு விஷயங்களை செய்ய வேண்டி வரும். அதற்காக தான் சைபர் செக்யூரிட்டி மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு ஆகியவற்றை மேம்படுத்த முதலீடு செய்து வருகிறது. ஆபத்தை முன்கூட்டியே கண்காணிப்பதற்கு எண்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட் பிரேம் ஒர்க் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஆட்கள் பாதி ஆட்டோமேஷன் பாதி என்ற நிலையை நோக்கித்தான் வங்கித் துறை நகர்வது போல தெரிகிறது. வங்கிகளுக்கே வங்கியாக இருக்கும் ரிசர்வ் வங்கியே பணியாளர்களை குறைத்து மற்ற விஷயங்களில் முதலீடு செய்வது ஒருபுறம் நன்மையாக பார்க்கப்பட்டாலும், மறுபுறம் வேலை வாய்ப்புகள் குறைந்திருப்பதும் கவலை அளிக்கிறது. ஆனால் அதற்காக தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பிலும் எந்த குறையுமின்றி தொடர்ந்து ஆர்பிஐ செயல்பட்டு வருவதும் அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications