இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) டிசம்பர் 4 ஆம் தேதி தனது இரு மாதங்களுக்கு ஒருமுறை நடத்து பொருளாதார மதிப்பாய்வைத் தொடங்கியது, டிசம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடைந்து 10 மணிக்கு ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முடிவுகளை வெளியிட்டார்.
RBI பிப்ரவரி 2023 முதல் ரெப்போ விகிதத்தை 6.5% ஆக பராமரித்து வருகிறது, இதன் மூலம் இன்றைய கூட்டத்தையும் சேர்த்து 11வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமில்லாமல் அறிவித்துள்ளது. இதோடு சிஆர்ஆர் விகிதத்தை 4.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விவசாயிகளை ஆதரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நாட்டின் விவசாய உற்பத்தியை அதிகரித்து உணவு பொருட்கள் மீதான பணவீக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி இன்று நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் பல முக்கியமான முடிவுகளை வெளியிட்ட நிலையில், பிணையம் இல்லாத விவசாயக் கடன்களுக்கான வரம்பை ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன் கிடைப்பதை அதிகரிக்கும், அதவும் விவசாயிகளுக்கு அதிகளவில் கிடைக்கும். இதன் மூலம் விவசாய நடவடிக்கைகளில் முதலீடு செய்யவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படும்.
உயரும் விவசாய உள்ளீட்டுச் செலவுகள் மற்றும் ஒட்டுமொத்த பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு கடன் வரம்பை உயர்த்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மலிவு மற்றும் எளிதாகக் கிடைக்கும் கடனை வழங்குவதன் மூலம், நிதிச் சுமையைக் குறைத்து, நிலையான விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க RBI இலக்கு வைத்துள்ளது. இந்த முயற்சி விவசாய உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்க விகிதங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்: 2024-25 நிதிய ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6% ஆகவும், 3வது காலாண்டு 6.8%, 4வது காலாண்டு 7.2% ஆகவும் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.
2024-25 நிதிய ஆண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 4.8% ஆகவும், 3வது காலாண்டு 5.7%, 4வது காலாண்டு 4.5% ஆகவும் இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications