உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மார்க் தர்ஷத் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (Margdarshak Financial Services Ltd) நிறுவனத்திற்கான பதிவு உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. ஆர்பிஐ தரப்பில் நடத்தப்பட்ட தணிக்கையில் 2021 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி இந்த நிதி நிறுவனம் குறைந்தபட்ச ஒழுங்குமுறை நிகர சொந்த நிதி ரூ 5 கோடியையும் NBFC-MFI நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச மூலதன விகிதம் 15 சதவீதத்தையும் பராமரிக்க தவறிவிட்டது என்பது கண்டறியப்பட்டது. இந்த காரணத்தால் நிறுவன உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
ரிசர்வ் வங்கி சார்பில் இந்த நிறுவனத்தில் சட்டரீதியாக நடத்தப்பட்ட தணிக்கையின்படி மார்ச் 31, 2021 நிலவரப்படி இந்த நிறுவனம், பணப்புழக்க சிக்கல்களை எதிர்கொண்டு இருப்பதும் அதன் கடன் வழங்குநர்களுக்கு 49. 27 கோடியை திரும்ப செலுத்த தவறியதும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும் இந்த தணிக்கையின் போது இழப்புகள் 187 கோடி மற்றும் அதிக நிகர வாரா கடன் 82.37 கோடி ஆகியவை இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனால் இந்த நிறுவனத்தால் தொடர்ந்து செயல்பட முடியும் என்ற நம்பகத்தன்மை போய்விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த ஆண்டுக்கான இருப்பு நிலை குறிப்பை இறுதி செய்வதில் இந்த வங்கி தாமதம் செய்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு பிறகு தான் இந்த நிறுவனம் தன்னுடைய இருப்புநிலை குறிப்பை தாக்கல் செய்ததாம். மேலும் இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிப்பதில் கணிசமான தாமதம் ஏற்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டுகிறது.
இந்த நிறுவனத்தில் நேரடியாக சென்று ஆய்வு நடத்திய போது கணக்கு புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்களை வழங்கி ஒத்துழைக்க மறுத்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதற்கிடையே பியர் டு பியர் கடன் தளம் மற்றும் டிஜிட்டல் கடன் குறித்த வழிகாட்டுதல்களின் சில விதிகளுக்கு இணங்காததற்காக NDX P2P Pvt Ltd மற்றும் Innofin Solutions Pvt Ltd ஆகியவற்றுக்கு அபராதம் விதித்துள்ளது.
இதன்படி Innofin Solutions Pvt Ltd நிறுவனம் 1. 99 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் NDX P2P Pvt Ltd நிறுவனம் 1.92 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications