வீட்டு கடன், வாகன கடன், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க கடன், மொபைல் போன் வாங்க கடன், தங்கத்தை அடமானமாக வைத்து வாங்கும் நகை கடன், தனிநபர் கடன் என இந்தியாவில் பல வகையான கடன்கள் உள்ளன. கடன் இல்லாத நபரே இல்லை என சொல்லும் அளவுக்கு கோடிக்கணக்கான இந்தியர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு கடனை வாங்கி இருப்பார்கள்.
வழக்கமாக நாம் வழங்கும் பொருளை அடமானமாக பெற்றோ அல்லது நம் வருமானத்தை அடிப்படையாக கொண்டு கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் தான் வங்கிகள் கடன்களை வழங்குகின்றன. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு முதல் மாற்றப்பட இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வர இருக்கும் ECL அதாவது Expected Credit Loss - எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு என்ற புதிய விதிமுறையால் சுமார் 62% இந்திய மக்களுக்கு வங்கி கடன்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்த போகிறது.

தற்போதுள்ள விதிமுறைப்படி, ஒரு நபர் வங்கியில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை செலுத்தத் தவறி, அது வாராக்கடனாக மாறும்போதுதான் வங்கிகள் அதற்கான இழப்பீட்டுத் தொகையை ஒதுக்கும். அதாவது, தவறு நடந்த பிறகு வங்கி நடவடிக்கை எடுக்கும். ஆனால் புதிய ECL முறைப்படி வங்கிகள் ஒருவருக்கு கடன் கொடுக்கும் போதே, எதிர்காலத்தில் அவர் அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்க எவ்வளவு வாய்ப்பு (Risk) உள்ளது என்பதை முன்கூட்டியே கணிக்க வேண்டும். இதற்காக வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர், வருமான நிலைத்தன்மை, முந்தைய கடன் வரலாறு போன்றவற்றை வங்கிகள் கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் கடன் கேட்டு விண்ணப்பம் செய்யும் சுமார் 62 சதவீதம் பேரின் CIBIL ஸ்கோர் 730-க்கும் குறைவாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. புதிய ECL விதிமுறை அமலுக்கு வரும்போது, 730-க்கும் கீழ் சிபில் ஸ்கோர் உள்ளவர்களை வங்கிகள் "அதிக ஆபத்துள்ளவர்கள்" (High Risk) என்று கருதத் தொடங்கும். இதனால் வங்கிகள் தங்களின் லாபத்தில் பெரிய தொகையை முன்னெச்சரிக்கை நிதியாக ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும். இது சுமார் 42,000 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த நிதி சுமையைத் தவிர்க்க, வங்கிகள் தங்களின் கடன் வழங்கும் விதிகளை மிகவும் கடினமாக்கும். இதன் காரணமாக, 730-க்கும் கீழ் சிபில் ஸ்கோர் வைத்துள்ள 62% மக்கள் கடன் பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அதாவது வங்கிகள் புதிய கடன்களை வழங்கத் தயங்கலாம் அல்லது நேரடியாக கடன் விண்ணப்பத்தையே நிராகரிக்கலாம். ஒரு வேளை அவர்களுக்கு கடன் கொடுத்தாலும் வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்கும். கூடுதல் சொத்துக்களை அடமானமாகக் கேட்கலாம் அல்லது அதிகப்படியான ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லலாம்.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் ஒரு நபருக்கு கடன் வழங்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நேரடியாக வங்கிகள் வசம் செல்லும். இதனால் தினக்கூலிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் அதாவது நிலையான மாதச் சம்பளம் இல்லாமல், சீரற்ற வருமானம் கொண்டவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதுவரை எந்தக் கடனும் வாங்காமல், இப்போதுதான் முதல்முறையாக வங்கி கடன் வாங்க செல்பவர்களுக்கு சிபில் ஸ்கோர் இருக்காது என்பதால் அவர்களும் பாதிக்கப்படுவர்.

பொருளாதாரச் சூழலால் தங்களின் EMI-ஐ சில நாட்கள் தாமதமாகச் செலுத்தியவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கை வங்கிகளின் கடன் வழங்கும் ஆரோக்கியத்தை பராமரிக்கும். பின்னர் நஷ்டத்திற்கு பணம் எடுக்காமல் முன் கூட்டியே வங்கிகள் பணத்தை எடுத்து வைக்க வேண்டும். எனவே கடன் வழங்குவதில் வங்கிகள் இன்னும் கவனமாகவும் கடும் கட்டுப்பாட்டுடனும் இருக்கும்.
சிபில் ஸ்கோர் என மட்டுமில்லாமல் அவர் என்ன வேலை செய்கிறார், அந்த வேலை நிரந்தரமானதாக இருக்குமா, சீரான வருமானம் இருக்குமா என்பதை எல்லாம் வங்கிகள் ஆய்வு செய்து தான் கடன் கொடுக்கும். குறிப்பிட்ட நபருக்கு கடன் தருவதில் அதிக ரிஸ்க் உள்ளது அது வாரா கடனாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என தோன்றினால் அதிக வட்டி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே சிபில் ஸ்கோரை பராமரிப்பது, ஏற்கனவே உள்ள கடன்களை சரியான தேதியில் செலுத்துவது, வருமானத்தை தக்க வைத்து கொள்வது ஆகியவற்றை பின்பற்றுவோருக்கு தான் இனி வங்கி கடன்கள் எளிமையாக கிடைக்கும்,. ரிசர்வ் வங்கியின் இந்த விதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருவதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications


