டெல்லி: ரிசர்வ் வங்கி இன்று நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதே நேரம் அடுத்த நிதியாண்டின் ஜிடிபி கணிப்பினையும் வெளியிட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் கொரோனாவினால் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வந்தாலும், தற்போது லாக்டவுனில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று பல தரப்பில் இருந்தும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. இதற்கிடையில் தற்போது ரிசர்வ் வங்கியும் தனது மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.
ஜிடிபி கணிப்பு
2022ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 10.5% ஆக வளர்ச்சி காணும் என்று கணித்துள்ளது. அதோடு ரெப்போ விகிதத்திலும் 4% என்பதனை மாற்றம் செய்யவில்லை. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில் அடங்கிய ஆறு பேர் அடங்கிய இந்த குழு இந்த முடிவினை எடுத்துள்ளது. அதோடு பணவீக்க விகிதமும் எதிபார்ப்பதனை விட சிறப்பாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்தியா
கடந்த ஆண்டில் தான் கொரோனாவினைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதோடு மக்கள பல ஆயிரம் பேர் தங்களது வேலைகளை இழந்து தவித்து வந்தனர். ஆனால் தற்போது பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதொடு தொழிற்சாலைகளும் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்து விட்டன. ஆக தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.
தடுப்பூசிகள் வந்துவிட்டன
அதோடு கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகளும் வந்துள்ளன. இதனால் நிச்சயம் நடப்பு நிதியாண்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பொருளாதாரம் இயல்பான வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக வட்டி விகிதத்திலும் இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கியும் மாற்றம் செய்யவில்லை. அதோடு கடந்த திங்கட்கிழமையன்று வெளியான பட்ஜெட்டில் பற்பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதுவும் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி பாதையில் பற்பல துறைகள்
குறிப்பாக கடந்த ஆண்டினை காட்டிலும் வாகனத்துறை, உள்கட்டமைப்பு, ஹெல்த்கேர் துறைகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்த துறையில் வளர்ச்சியினை மேம்படுத்தும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக முந்தைய ஆண்டினை காட்டிலும் விவசாயத் துறையில் வளர்ச்சி விகிதம் கண்டு வருகிறது. கொரோனா காலத்தில் அனைத்து துறைகளும் முடங்கிய நிலையில், ஒரே ஒரு துறை மட்டும் வளர்ச்சியினை கண்டது. அது விவசாயத் துறை தான். ஆக இதுவும் வரும் 2022ம் நிதியாண்டிலும் வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications