ஒரு பக்கம், கொரோனா வைரஸ் எல்லா நாட்டு பங்குச் சந்தைகள் தொடங்கி, பொருளாதாரங்களை பந்தாடிக் கொண்டு இருக்கிறது.
மறு பக்கம், இந்தியாவின் நிதித் துறை பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது.
கடந்த 2019-ல் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என்று சொல்லப்படும் Non Banking Financial Companies NBFC கம்பெனிகள், கண்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்துவிட்டு திவால் ஆகத் தொடங்கினார்கள்.
இடியாப்பச் சிக்கல்
அதன் பின் வாரா கடன் பிரச்சனை, பொதுத் துறை வங்கிகள் இணைப்புப் பிரச்சனை, வங்கிகளில் கடன் கொடுக்க போதுமான நிதி இல்லாத பிரச்சனை, நுகர்வு குறைந்ததால் வங்கிக் கடன் வாங்க ஆள் பிடித்த பிரச்சனை என கடைசியில் இந்த மார்ச் 2020-ல் யெஸ் பேங்க் பிரச்சனையில் வந்து நின்றது.
பிஎம்சி வங்கி
இதற்கு மத்தியில் பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிப் பிரச்சனையை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த செப்டம்பர் 23, 2019 அன்று, முதன் முதலில் வங்கியில் டெபாசிட்டாக பணம் போட்டவர்கள் 1,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என அதிர்ச்சி கொடுத்த வங்கி இது தான். டெபாசிட் செய்தவர்கள் போராடியதால், ஒரு வழியாக பணம் எடுக்கும் அளவை அதிகரித்தது ஆர்பிஐ.
பணம் எடுக்கும் அளவு
மத்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள், தற்போது அதிகபட்சமாக 50,000 ரூபாய் பணத்தை மட்டுமே எடுக்க முடியும். இதனால் 78 % டெபாசிட்தாரர்கள் தங்கள் பணத்தை முழுமையாக பிஎம்சி வங்கியில் இருந்து எடுக்க முடியுமாம். இப்போதும் இந்த உச்ச வரம்பு, பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு இருக்கிறது.
நீட்டிப்பு
இந்த பணம் எடுக்கும் கட்டுப்பாடு உட்பட, பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மீது ஆர்பிஐ விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் என்று நீங்கும் என்கிற கேள்விக்கு, இன்று மத்திய ரிசர்வ் வங்கி பதில் சொல்லி இருக்கிறது. வரும் ஜூன் 22, 2020 வரை பிஎம்சி வங்கி மீதான கட்டுப்பாடுகள் தொடருமாம். பிஎம்சி வங்கியை மீட்டு எடுக்க ஒரு திட்டத்தை ஆலோசித்து வருகிறார்களாம்.
ஆர்பிஐ
யெஸ் பேங்க் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், ஏப்ரல் 03 வரை இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆர்பிஐயின் துரித நடவடிக்கைகளால், மார்ச் 18-ம் தேதியே யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் மீண்டும் பழைய படி முழு பணத்தை எடுக்க முடிந்தது. ஆனால் பிஎம்சி வங்கி விவகாரத்தில் சுமார் 6 மாதங்கள் ஆகியும் ஆர்பிஐயால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையா..? என்கிற கேள்வியும் எழுந்து இருக்கிறது.
அதிகாரம் இல்லை
யெஸ் பேங்க் போன்ற வணிக வங்கிகளில் ஆர்பிஐ முடிவு செய்ய போதுமான அதிகாரங்கள் இருக்கிறதாம். ஆனால் கூட்டுறவு வங்கிகளில் ஒரு தீர்மானம் எடுக்க, ஆர்பிஐக்கு போதுமான அதிகாரங்கள் கிடையாதாம். எனவே தான் பிஎம்சி வங்கி பிரச்சனைகளைத் தீர்க்க தாமதமாகிறது எனச் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications