மும்பை: இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குப்படுத்தும் ஒரு அமைப்பாக மத்திய ரிசர்வ் வங்கி இயங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பொதுவுடைமை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன.
வங்கி சாராத நிதி நிறுவனங்களும் கூட ரிசர்வ் வங்கியின் ஆணைக்கு இணங்க வேண்டும். அந்த வகையில் ரிசர்வ் வங்கி அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களையும் கண்காணித்து தவறுகள் நடந்தால் அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கும்.

ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தற்போது ஐந்து கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
1. மத்திய கூட்டுறவு வங்கி (Central Co-operative Bank)
2. தி வைஷ் கூட்டுறவு ஆதர்ஷ் வங்கி
3. இந்திர மகிளா சாஹகாரி வங்கி
4. சித்ரதுர்கா மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி
5. சமர்த் சாஹகாரி வங்கி
ஆகிய ஐந்து வங்கிகளுக்கும் அபராதம் விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இதில் மத்திய கூட்டுறவு வங்கி, மோசடிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக அந்த வங்கிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கேஒய்சி விதிமுறைகளை சரியாக செயல்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக தி வைஷ் கூட்டுறவு ஆதர்ஷ் வங்கிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதே போல இந்திர மகிளா சாஹகாரி வங்கிக்கு 75 ஆயிரம் ரூபாயும் ,சித்திர துர்கா மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி மற்றும் சமர்த் சாஹகாரி வங்கிக்கு 50,000 ரூபாயும் அபராதம் விதித்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஏஸ் மணி (Ace Money) இந்தியா லிமிடெட் என்ற வங்கி சாராத நிதி நிறுவனத்திற்கான உரிமத்தை மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. டெல்லியின் வடமேற்கு பகுதிகளில் ஏஸ் மணி இந்தியா நிறுவனம் நிதி சேவைகளை வழங்கி வந்தது.
ஆனால் இது கடன்களை வழங்குவதில் ஒழுங்குமுறைகளை பின்பற்றவில்லை என குற்றம் சாட்டி அதன் உரிமத்தை ரத்து செய்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications