சென்னை: ஆர்பிஐ தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் சமீபத்தில் சில வங்கிகளுக்கு அபராதங்களை விதித்தது. தொடர்ச்சியாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு (Central Bank of India) ரூ. 1.45 கோடி ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது. கடன்களை நிறுவனங்களுக்கு வழங்குதல் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பு போன்றவற்றில் சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மீது ரூ.1.45 கோடி அபராதம் விதித்துள்ளதாக ஜூன் 14ம் தேதி அன்று அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஒரு நிறுவனத்திற்கு கேப்பிடல் டிமாண்ட் கடனை வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை மீறிய செயல்பாடு ஆகும்.

பொதுவாக டிமாண்ட் லோன்கள் குறுகிய கால கடன்கள் ஆகும். இதனை வைத்து ஒரு நிறுவனம் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்ய பயன்படுத்துவது ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி தவறாகக் கருதப்படுகிறது. சான்றாக ஒரு துணிக்கடை புதிய கிளை தொடங்க கடன் பெற்றால், உடனடியாக லாபம் வரும் என்று சொல்ல முடியாது. எனவே கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம். இது குறைவான கால அவகாசத்தில் திருப்பி செலுத்தக்கூடிய கடனாகும். அப்படி அந்த துணிக்கடையை வைத்திருக்கும் நபரால் கடனை செலுத்த முடியாவிட்டால், நிறுவனம் நெருக்கடிக்கு ஆளாகும். மேலும் இது குறுகிய கால கடன் என்பதால் இதற்கு வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இது போன்ற நிறுவன மேம்பாட்டுக்காக எடுக்கப்படுவதற்கு "டேர்ம் லோன்களே" சிறந்தது
மேலும், சில வாடிக்கையாளர்களின் கணக்குகளில், அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஆனால் புகார் எழுந்து 10 நாட்களுக்குப் பின்பும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் பணத்தை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளது. சில வாடிக்கையாளர்களின் புகார்களை 90 நாட்களுக்குள் தீர்த்து வைக்கவோ அல்லது இழப்பீடு வழங்கவோ தவறியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுவே அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்று ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.
2022 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிதி நிலையைக் கண்காணிப்பதற்காக ரிசர்வ் பேங்க் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் மூலம், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை மீறியது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு விளக்கம் கேட்டு RBI நோட்டீஸ் அனுப்பியது.
ஆர்பிஐ அனுப்பிய நோட்டீசுக்கு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா பதிலளித்துள்ளது. அதன்படி அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், அதற்கான அபராதம் விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications