இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செவ்வாய்க்கிழமை அன்று ஆக்சிஸ் பேங்க் லிமிடெட் மற்றும் HDFC பேங்க் லிமிடெட் ஆகிய இரண்டு வங்கிகளுக்கும் பல்வேறு ஒழுங்குமுறை உத்தரவுகளுக்கு இணங்காததற்காக அபராதம் விதித்துள்ளது. செப்டம்பர் 3, 2024 அன்று, ஆக்சிஸ் பேங்குக்கு ரூ.1.91 கோடியும், அதே நேரத்தில் HDFC பேங்குக்கு ரூ.1 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்சிஸ் பேங்குக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணம், RBI நடத்திய சட்டபூர்வ ஆய்வில் (ISE 2023) சில விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் நிதி நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1949-ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டன.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, அக்சிஸ் பேங்க் தகுதியற்ற நிறுவனங்களுக்கு சேமிப்பு கணக்குகளை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தனித்துவமான வாடிக்கையாளர் அடையாளக் குறியீடுகளை (UCIC) வழங்கத் தவறியதற்கும், வேளாண் கடன்களுக்கு முறையற்ற பாதுகாப்பு பிணையத்தை பெற்றததற்காகவும் ரூ.1.60 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் முழுமையான சொந்த நிறுவனம் ஒரு தொழில்நுட்ப சேவை வழங்குநராக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோன்று சில விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக HDFC பேங்குக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெபாசிட்கள் மீதான வட்டி விகிதம், வங்கிகளால் ஈடுபடுத்தப்படும் மீட்பு முகவர்கள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை ஆகியற்றின் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் மேற்பார்வை மதிப்பீட்டிற்கான சட்டப்பூர்வ ஆய்வு மார்ச் 31-ஆம் தேதி, 2022-ஆம் ஆண்டு RBI-ஆல் நடத்தப்பட்டது. ரிசர்வ் வங்கியின் ஆய்வில், ரூ.250-க்கும் மேல் உள்ள ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கான முதல் ஆண்டு பிரீமியத்தை செலுத்துதல், தகுதியற்ற நிறுவனங்களுக்கு கணக்கு தொடங்குதல் போன்ற காரணங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் அக்சிஸ் பேங்கின் பங்குகள் ரூ.16.35 அதிகரித்து ரூ.1,187.00 ஆகவும், HDFC பேங்கின் பங்குகள் ரூ.3.10 உயர்ந்து ரூ.1,650.60 ஆகவும் முடிவடைந்தது.
தற்போது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகளைத் தொடர்ந்து கண்டுபிடித்து அவற்றிற்கு அபராதம் விதித்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு முன்னணி வங்கிகளுக்கும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications