தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் செலவு சற்று அதிகமாக இருக்கும். இதனால் தங்கத்தை அடமானம் வைத்து மக்கள் கடன் பெறுவார்கள். இந்தியர்கள் தங்கத்தை விரும்பி வாங்குவதற்கான முக்கிய காரணமே இந்த ஒரு விஷயம் தான். தேவைப்படும் நேரங்களில் அவற்றை அடமானம் வைக்கலாம். ஆனால் மற்ற முதலீடு திட்டங்களில் இப்படி எதுவுமே செய்ய முடியாது.
அதிகளவில் பெறப்படும் கடன்களில் தங்கக் கடனும் ஒன்று. அதனால் தான் ஆர்பிஐ கடன் வழங்கும் வங்கிகள் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என்பதற்காக பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டின் ஜூன் 6-ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை வணிக வங்கிகள், சிறு நிதி நிறுவனங்கள், கிராமப்புற வங்கிகள் என எல்லா வங்கிகளும் பின்பற்றியாக வேண்டும்.

85% கடன்: இதற்கு முன்பு எல்லா நகைக் கடன்களுக்கும் 75% மட்டுமே கடனாக வழங்கப்பட்டது. அதாவது தங்கத்தின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்தை கடனாகப் பெற முடியும். ஆனால் தற்போது நகை மதிப்பில் அதிக கடன் பெறக்கூடிய புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் "டயர்டு லோன் டு வேல்யூ ரேஷியோ" என்று கூறுகின்றனர்.
உதாரணமாக ரூ.2.5 லட்சம் வரையிலான கடன் பெறும் நபர்களுக்கு அவர்களுடைய தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் கிடைக்கும். அதே போல ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் நபர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் கிடைக்கும். ரூ.5 லட்சத்திற்கும் மேல் கடன் பெறுபவர்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.
திருப்பிச் செலுத்தும் விதிமுறை மற்றும் ஏல விதிமுறைகள்: சில வங்கிகள் புல்லட் ரீபேமெண்ட் செய்யும் வசதியை வழங்குகின்றன. அதாவது கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை அசலிலும் வட்டியிலும் வரவு வைக்கலாம். இதுபோன்ற நகைக்கடன்களின் கால அளவு 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் ஏலத்திற்கு விடுவதற்கு முன்பே வங்கி வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
ஏல விதிமுறை: தங்கத்தை ஏலம் விடும்போது அதன் குறைந்தபட்ச தொடக்க விலை சந்தை விலையோடு ஒப்பிடுகையில் 90 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. முதல் ஏலம் மற்றும் இரண்டாவது ஏலம் ஆகியவற்றிலும் இதே விலை நிர்ணயம் தான் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு முறையும் ஏலம் எடுக்க ஆள் இல்லை என்றால் 85 சதவீதமாக குறைக்க வங்கிகளுக்கு அனுமதி உண்டு.
உரிய நேரத்தில் நகைகளை ஒப்படைத்தல்: ஒரு வாடிக்கையாளர் முழுத் தொகையையும் செலுத்தி விட்டால் அன்றைய தினமே நகையை ஒப்படைக்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும் அதிலிருந்து 7 வேலை நாட்களுக்குள் அடகு வைக்கப்பட்ட நகைகளை ஒப்படைக்க வேண்டும். வங்கிகள் நகையை தராமல் வைத்திருந்தால் 7 நாட்களுக்குப் பிறகு தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5,000 வாடிக்கையாளருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.


Click it and Unblock the Notifications