இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் நடைபெற்ற கூட்டம் என்பதால் ரிசர்வ் வங்கி என்னென்ன அறிவிப்புகளை வெளியிட போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து நிதி கொள்கை குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அறிவித்தார். இதன்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கக்கூடிய குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அறிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 5.25% என்ற அளவிலேயே தொடர்ந்து நீடிக்கும் என தெரிவித்தார். எனவே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்பதால் நம்முடைய வீட்டு கடன் மற்றும் வாகன கடன், தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதமும் மாறாது.

இந்திய ரிசர்வ் வங்கி 2026- 27ஆம் ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி அதாவது பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதமாக இருக்கும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது வளர்ச்சி கணிப்பை குறைத்துள்ளது. அதேபோல சராசரி பணவீக்க விகிதம் 4.6 சதவீதமாக இருக்கும் என கணித்திருக்கிறது . கடந்த 11 மாத காலமாக சராசரி பணவீக்க விகிதம் 1.95 சதவீதமாக இருந்திருக்கிறது. ஆனால் ஈரான் போரால் ஏற்பட்டிருக்க கூடிய தாக்கம் நாட்டின் பண வீக்கத்தை 4.6% வரை உயர்த்தும் என ரிசர்வ் வங்கி கணிக்கிறது.
ஈரான் போரால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை கண்டு தற்போதைக்கு பதற்றம் அடைய வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடம் செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. போர் தொடர்ந்து, பல்வேறு பொருட்களின் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்படும்போது நேரடியாக அது மக்களின் பாக்கெட்டிலேயே கை வைக்கும் என தெரிவித்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பண வீக்கத்தை அதிகரித்து பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்த செய்யும் அபாயம் உள்ளது என கூறியுள்ளது. உரம் , எல்பிஜி உள்ளிட்டவற்றின் வரத்து குறைந்து போவது நாட்டில் விவசாயம் மற்றும் சேவை துறைகளை பாதிக்க செய்யும், உள்நாட்டில் உற்பத்தி குறையும் என தெரிவித்திருக்கிறது. இதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் சரியும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் இது முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி அல்ல. ஈரான் போர் நீடிக்கும் பட்சத்தில் தான் இந்த அபாயங்கள் உண்டு. தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தர போர் நிறுத்தமாக மாறும் போது இந்த சிக்கல்கள் குறையும்.
இப்படி பல பிரச்சினைகள் வர வாய்ப்பு இருந்தாலும் ஒரு நல்ல செய்தியை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. அதாவது சில காலத்திற்கு குறைந்த வட்டி விகிதமே நீடிக்கும் என தெரிவித்துள்ளது. வழக்கமாக பணவீக்கம் அதிகரித்தால் வட்டி உயர்த்தப்படும் இது நம் வீட்டு கடன், வாகன கடன் வட்டியை உயர்த்தும். ஆனால் ஈரான் போர் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் சில காலத்திற்கு வட்டி உயராது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே அக்டோபர் வரை வட்டி விகித மாற்றம் இருக்காது என நிபுணர்கள் கணிக்கின்றனர்.அந்த வகையில் இன்னும் சில மாதங்களுக்கு நம் வீட்டு கடன், வாகன வட்டி மாறாது குறைந்த வட்டியிலேயே கடன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications