மும்பை: பந்தன் வங்கியின் புதிய மேலாண் இயக்குனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் பார்தா பிரதிம் சென்குப்தா பதவி ஏற்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து பந்தன் வங்கியின் பங்கு மதிப்பு பங்குச்சந்தையில் 7% வரை அதிகரித்தது. பார்தா பிரதிம் சென்குப்தா கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தான் பந்தன் வங்கியின் மேலாண் இயக்குனர் பொறுப்பை ஏற்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை அடுத்து அக்டோபர் 10ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன்னுடைய மற்ற அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெளியேற இருப்பதாக கூறினார். இதன்படி ரிசர்வ் வங்கியும் தற்போது அவர் பொறுப்பேற்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் அடுத்த மூன்றாண்டு காலத்திற்கு பார்தா பிரதிம் சென்குப்தா பந்தன் வங்கியின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயலாளர் பொறுப்பினை வகிப்பார்.

இந்த தகவல் வெளியானதை அடுத்து அக்டோபர் மாதம் 11ஆம் தேதி அன்று காலை 9.30 மணி அளவில் பந்தன் வங்கி நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 7 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கின் விலை 200.8 ரூபாய் என்ற அளவை எட்டியது. அதுமட்டுமின்றி தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் அமைப்பு, மைக்ரோ யூனிட்டுகளுக்கான கடன் உத்தரவாத நிதியம் திட்டத்தின் கீழ் பந்தன் வங்கியின் உரிமை கோரல்கள் தொடர்பான முழுமையான தணிக்கையை முடித்து விட்டதாக அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே சர்வதேச பங்கு தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸ் பந்தன் வங்கி நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது. இதன் ஒரு பங்கு மதிப்பு 240 வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக பார்தா பிரதிம் சென்குப்தா வங்கியின் தலைமை பொறுப்பினை ஏற்பது ஒரு பாசிட்டிவான டெவலப்மென்ட் என ஜெஃப்ரிஸ் தரகு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. வங்கி துறையில் நிபுணத்துவம் பெற்றவர் பார்தா பிரதிம் சென்குப்தா என்பதால் அவர் பந்தன் வங்கியின் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவார் என சொல்லப்படுகிறது.
பந்தன் வங்கி பங்கினை பொறுத்தவரை கடந்த ஓராண்டு காலத்தில் இதன் மதிப்பு 15 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. தற்போது அது மீண்டு வர தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வரவழைத்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications