வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் பணத்தின் அளவு சில ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. 2026-ஆம் ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, ஆர்பிஐ-யின் டெபாசிட்டர் எஜுகேஷன் அவேர்னஸ் (DEA) ஃபண்டில் இருக்கும் தொகை ரூ.86,917 கோடியாக அதிகரித்துள்ளது. எப்போது ஒருவருடைய பணம் DEA ஃபண்டுக்குச் செல்லும் என்பதை பார்ப்போம்.
எப்போது ஒருவருடைய பணம் உரிமைக்கோராததாகக் கருதப்படும் தெரியுமா?: ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி, ஒரு சேவிங்ஸ் அக்கவுண்ட் அல்லது கரண்ட் அக்கவுண்டில் தொடர்ந்து 2 ஆண்டுகள் வரை எந்த ஒரு பணி பரிவர்த்தனையும் நடக்காமல் இருந்தால் அது "இன்னாப்பரேட்டிவ் அக்கவுண்ட்டாக" வகைப்படுத்தப்படும். அதாவது செயல் இழந்த கணக்காக வங்கிகள் கருதும்.

அதன் பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகள் வரை அந்த கணக்கில் இருக்கும் பணம் அப்படியே இருந்து அதை யாரும் கேட்காமல் இருந்தால் அந்தத் தொகை முழுவதுமாக ரிசர்வ் வங்கியின் DEA ஃபண்டுக்கு அனுப்பப்படும்.
அதேபோல ஒருவர் ஃபிக்சட் டெபாசிட் செய்திருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த பணத்தை அவர் வாங்க வரவில்லை என்றால்.. அந்தப் பணமும் DEA ஃபண்டுக்கு மாற்றப்படும்.
DEA ஃபண்டுக்கு அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் பெற முடியுமா?: 10 ஆண்டுகள் வரை ஒருவரின் கணக்கில் இருக்கும் உரிமை கோரப்படாத பணம் DEA ஃபண்டுக்கு மாற்றப்பட்டிருந்தாலும்.. கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவருடைய சட்டப்பூர்வ வாரிசுதாரர் அதை எப்போது வேண்டுமானாலும் திரும்பக் கேட்கலாம். அதற்கு கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி ஊழியர்கள் அந்த ஆவணங்களை எல்லாம் சரிபார்த்துவிட்டு பணத்தை வழங்குவார்கள். ரிசர்வ் வங்கியின் DEA ஃபண்டுக்கு அனுப்பப்பட்ட பணத்தை மீண்டும் வங்கி அவர்களிடமிருந்து வாங்கி அந்த வாடிக்கையாளர்களுக்கே திருப்பித் தரும். இப்படி மாற்றப்பட்ட சுமார் ரூ.17,414 கோடிக்கும் அதிகமான தொகையை வங்கிகள் மீண்டும் ரிசர்வ் வங்கியிடம் வாங்கி வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளன.
பணத்தை உரியவர்களிடமே ஒப்படைக்க ரிசர்வ் வங்கி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. செயலிழந்த கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை கண்டறிந்து உரியவர்களிடமே பணத்தை ஒப்படைக்கும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 5% முதல் 7.5 சதவீதம் வரை இன்சென்டிவ் வழங்கி வருகிறது.
வங்கி கணக்கு வைத்திருக்கும் உரிமையாளர் இறந்திருந்தால் வாரிசுதாரர்கள் எளிதில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதுவரை "யூவர் மணி யூவர் ரைட்" என்ற முகாம் மூலம் நாடு முழுவதும் சுமார் 748 மாவட்டங்களில் சிறப்பு பிரச்சாரம் நடத்தப்பட்டு உரிமையாளர்களின் பணம் வழங்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி உரிமை கோரப்படாத சுமார் ரூ.7,320 கோடி தொகை இந்த சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
அதோடு ரிசர்வ் வங்கி உத்கம் (UDGAM) என்ற இணையதளத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளத்தில் எந்தெந்த வங்கியில் உரிமை கோரப்படாத பிக்சட் டெபாசிட் இருக்கிறது என்பதை பார்க்க முடியும். ஒரே இடத்தில் பல வங்கிகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை வைத்து பணத்தை திரும்பப் பெறலாம்.


Click it and Unblock the Notifications
