இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் நாளை முதல் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுவாக, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், முக்கிய கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) தொடர்பான முடிவு உள்ளிட்ட முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்.
இதனால் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என்றாலே அது அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடும். நாளை (பிப்.4ம் தேதி) இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் தொடங்குகிறது. வரும் வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், இந்த காலண்டர் ஆண்டின் முதல் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ரெப்ரோ ரேட்டை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று 12 நிதி நிறுவனங்களில் 9 நிறுவனங்கள் நம்பிக்கையாக உள்ளன.
ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தால், வங்கிகளும் வட்டி குறைப்பு பலனை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். அதாவது வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்கும். இதனால் கடனை திருப்பி செலுத்துபவர்களின் இஎம்ஐ குறையும்.
இதற்கு முன் கடைசியாக 2020 மே மாதம் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. கோவிட்டின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் அப்போது வட்டி குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்தது. அதன் பிறகு கடந்த டிசம்பர் வரையிலான கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் கவுரா சென்குப்தா கூறுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருவாய் செலவின விகிதம் 11.4 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது நிதி ரீதியாக விவேகமானது. எனவே நிதிக் கொள்கை குழு கண்ணோட்டத்தில், பற்றாக்குறை எண்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தெரிவித்தார்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் பிரைமரி டீலர்ஷிப்பின் நிலையான வருமான உத்திக்கான மூத்த பொருளாதார நிபுணர் அபிஷேக் உபாத்யாய் கூறுகையில், பணவீக்கம் குறைந்துள்ளதால், வட்டி விகிதங்களை குறைக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். மேலும் அது குறையும். வட்டி விகிதங்களை குறைப்பது ரிசர்வ் வங்கி வளர்ச்சியை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த அனுமதிக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications