மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் மும்பையில் செப்டம்பர் 29ஆம் தேதி அன்று தொடங்கியது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் அதிகாரிகள் நாணய கொள்கை கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கியமான ஆலோசனையை நடத்தினர்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்கோத்ரா இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகளுக்கான குறுகிய கால கடன்கள் மீதான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார் . இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் என்பது 5.5 சதவீதம் என்ற அளவிலேயே தொடர்கிறது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு , வாகன கடன்கள், தனிநபர் கடன்கள், தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது. இந்தியர்களை பொறுத்தவரை இது சற்று ஏமாற்றம் அளிக்கும் ஒரு தகவலாகவே மாறி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் என ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனை அடுத்து ஏப்ரல் மாதத்தில் மேலும் 0.25 சதவீதம் குறைத்து வட்டி விகிதத்தை 6 சதவீதம் என்ற நிலையை எட்டியது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டது. இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.5% என ஆனது. இந்த ஆண்டில் மட்டும் 1% வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வீட்டுக் கடன் , வாகன கடன் , தங்கு நகை கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்தன .
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இந்த முறை வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஏனெனில் அண்மையில் தான் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை அறிவித்தது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கியும் அதே போன்ற ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது . ஆனால் இந்த கூட்டத்திலும் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வரவில்லை.
ஜிஎஸ்டி திருத்தம் மூலம் மக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாகும் என ஆர்பிஐ கருதுகிறது. அதே வேளையில் அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படும் என்பதால் மிக கவனமாகவே சூழலை கையாள ஆர்பிஐ விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications