சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் நிதி சேவைத் துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவது மட்டும் அல்லாமல் பல சிக்கலான செயல்முறையை எளிதாக்கி டிஜிட்டல் தளத்தை மேம்படுத்துவது மூலம் பெரும் மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை மூன்று முக்கிய சேவைகளை முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டுச் சந்தைக்கும், வங்கிகளுக்கும் அறிமுகம் செய்துள்ளது. PRAVAAH, ஆர்பிஐ ரீடைல் டைரெக்ட் மொபைல் ஆப், பின்டெக் ரெபாசிட்டரி என 3 சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

இந்த 3 சேவைகளும் ஏப்ரல் 2023, ஏப்ரல் 2024 மற்றும் டிசம்பர் 2023ல் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகும், புதிதாக அறிவிக்கப்படுவது இல்லை.
இந்த 3 சேவைகளும் நிதி சேவைத் துறையில் ஒழுங்குமுறை செயல்பாடுகளை மேம்படுத்துவதையும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதை எளிதாக்குவதையும், பின்டெக் துறைக்கு விரிவான தரவுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
PRAVAAH தளம்: PRAVAAH என்பது ஒரு சுருக்கமாகும். Platform for Regulatory Application, VAlidation and AutHorisation என்பதைத் தான் PRAVAAH என அழைக்கப்படுகிறது. இந்த தளத்தின் வாயிலாகத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி-யிடமிருந்து அனுமதிகள், உரிமங்கள் அல்லது ஒழுங்குமுறை அங்கீகாரங்களைப் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான, சென்டரலைஸ்டு இணைய தளமாகும்.
இந்த தளத்தில் ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை சார்ந்த துறைகளின் 60-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் உள்ளது. இதன் வாயிலாகத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் PRAVAAH தளத்தின் உதவியுடன் இணைய வழியாக விண்ணப்பித்தல், ஸ்டேட்டஸ் டிராக்கிங் மற்றும் சரியான நேரத்தில் முடிவெடுத்தல் ஆகிய சேவைகளைப் பெற முடியும்.
ஆர்பிஐ ரீடைல் டைரெக்ட் மொபைல் ஆப்: இது ரீடைல் முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆப் மூலம் அரசு பத்திரங்களை (G-SEC) நேரடியாக அவர்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து வாங்கவும் விற்கவும் எளிய வழியை உருவாக்கியுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் அந்த ஆப் கிடைக்கும் என்பதால், முதன்மை மற்றும் இரண்டாம் சந்தைகளில் அரசு பத்திரங்களின் முதலீட்டை எளிதாக்குகிறது.
FinTech ரெப்பாசிட்டரி: இது ஒரு தரவுக்களஞ்சியமாகும், இது இந்திய பின்டெக் நிறுவனங்கள் குறித்த விரிவான தரவுகளை வழங்குகிறது. இதன் மூலம் பின்டெக் துறைகள் எப்படி இயங்குகிறது, அதன் தன்மை என்ன என்பதை விரிவாகவும், எளிதாகவும் புரிந்துகொள்ள முடியும்.
இதனைக் கொண்டு ஆர்பிஐ, மத்திய அரசு, பிற ஒழுங்குமுறை ஆணையங்கள் கொள்கை உருவாக்கத்திற்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டு ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.
இந்த மூன்று முயற்சிகளும் இந்திய நிதித் துறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவது ஆர்பிஐ ரீடைல் டைரெக்ட் மொபைல் ஆப் தான்.


Click it and Unblock the Notifications