இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழுவின் இருமாத கூட்டம் ஏப்ரல் மாதம் 3, 5, 6 ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் நிலையில் இக்கூட்டத்தில் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பணிவீக்கம் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இந்தியாவின் பணவீக்கம் ஆர்பிஐ-யின் அதிகப்படியான வரம்பு எல்லையான 6 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர்பிஐ கடந்த ஒரு வருடத்தில் தொடர்ந்து ரெப்போ விகிதத்தை உயர்த்தி தற்போது 6.50 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. ஆர்பிஐ 2022 ஆம் ஆண்டில் மட்டும் 5 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது, இதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்திலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு 6.50 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி திவாலான நிலையில், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அந்நாட்டின் வங்கி கட்டமைப்பின் தடுமாற்றத்தையும் பதற்ற நிலையையும் குறைக்க அடுத்து நடக்க இருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்த நிலையிலும் இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை குறைந்தது 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தும் என தகவல் வெளியாகியுள்ளது, கடன் வாங்கியவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.
மாற்றம்
இதுவரையில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்திய பின்பு தான் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தியது. ஆனால், இந்த முறை அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது. ஆனாலும் இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது மாறுப்பட்ட ஓன்றாக உள்ளது.
கோட்டாக் இன்ஸ்ட்யூஷனல் ஈக்விடீஸ்
இந்தியாவில் பணவீக்கம் ஜனவரி - பிப்ரவரி மாதம் 6 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது, இதோடு கோர் இன்ப்ளேஷன் விகிதமும் 6 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்படலாம் என கோட்டாக் இன்ஸ்ட்யூஷனல் ஈக்விடீஸ் அமைப்பின் மூத்த பொருளாதார வல்லுனர் சுவோதீப் ரக்ஷித் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் டிசம்பர் மாதம் 5.72 சதவீதமாக இருந்த நிலையில், ஜனவரி மாதம் 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே பிப்ரவரி மாதம் கணக்கிட்டால் 6.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.75 சதவீதமாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications