உலக நாடுகள் மோசமான பொருளாதார நிலையை எட்டி வரும் நிலையில், இதை மேலும் மோசமாக்க கச்சா எண்ணெய் விலை உயர்வும், சீனாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் லாக்டவுன் அறிவிப்பும் வந்துள்ளது.
பிரிட்டன் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்து விட்டதாகப் பல தரப்பினர் கூறினாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதேபோல் அமெரிக்கா, ஐரோப்பா அடுத்த 6- 9 மாதத்தில் கட்டாயம் ரெசிஷனுக்குள் நுழையும் என்று பலர் கணித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக இந்தியாவில் முதல் கட்ட பாதிப்பு உருவாகியுள்ளது. இதைச் சமாளிக்க ஆர்பிஐ எடுக்கப்போகும் முடிவு நடுத்தர மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.
செப்டம்பர் பணவீக்கம்
செப்டம்பர் மாதத்தின் ரீடைல் பணவீக்கம் 5 மாத உயர்வில் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 9 மாதங்களாக நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான இலக்கான 6 சதவீதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.
ரெப்போ விகிதம்
ஆர்பிஐ கடந்த 5 மாதத்தில் சுமார் 1.90 சதவீதம் ரெப்போ விகிதத்தை உயர்த்தியும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆர்பிஐ தோல்வி அடைந்துள்ளது. மேலும் செப்டம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் 8.6 சதவீதமாக உயர்ந்துள்ளது, இதோடு தொழிற்துறை, சுரங்கம், மின்சாரம், எரிபொருள் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளதால் பிற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
HSBC கணிப்பு
இந்த நிலையைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் முக்கியமான ஆயுதம் டிசம்பர் மாத நாணய கொள்கை கூட்டம். இக்கூட்டத்தில் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கட்டாயம் 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தை உயர்த்தி ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 6.4 சதவீதமாக அறிவிப்பார் என HSBC கணித்துள்ளது.
கடைசி வாய்ப்பு
தற்போது ஆர்பிஐ-க்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இந்தப் பண்டிகை காலம் தான், அக்டோபர் மற்றும் நவம்பர் காலகட்டத்தில் நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, விலைவாசி ஆகியவை மேம்பட்டு நாட்டின் பணவீக்க அளவுகள் குறைந்தால் வட்டி விகிதத்தை உயர்த்துவதில் இருந்து தப்பிக்க முடியும்.
பொருளாதார மந்த நிலை
வட்டி விகித உயர்வால் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியும் என்றாலும் நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள் இதனால் குறையும். இது தான் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் நடந்து வருவது, அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரையில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை உருவாகியுள்ளது.
டிசம்பர் கூட்டம்
அக்டோபர் மற்றும் நவம்பர் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மேம்படவில்லை எனில் கட்டாயம் டிசம்பர் நாணய கொள்கை கூட்டத்தில் HSBC கணித்துள்ளது போலவே 50 அடிப்படை புள்ளிகள் ரெப்போ விகிதத்தை உயர்த்தி ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 6.4 சதவீதமாக அறிவிப்பார்.


Click it and Unblock the Notifications