இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை செவ்வாய்க்கிழமை துவங்கியுள்ளது, ஏப்ரல் மாத கூட்டத்தில் ஆர்பிஐ அமெரிக்க மத்திய வங்கியின் முடிவுகளுக்கு ஏற்ப ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ரெப்போ விகிதம் 6.50% ஆக தொடரும் என அறிவித்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை துவங்கிய இருமாத நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ எத்தகைய முடிவை எடுக்கும் என்பது முக்கிய கேள்வியாக இருக்கும் வேளையில், இதற்கான பதில் கிட்டதட்ட தெரிந்துவிட்டது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022-23 ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம். 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் வருடாந்திர அடிப்படையில் 12 சதவீதம் அதிகரித்து 1.57 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.
இந்தியாவின் உற்பத்தி PMI குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 31 மாத உயர்வை மே மாதம் எட்டியுள்ளது. ஏப்ரல் மாதம் 57.2 ஆக இருந்து உற்பத்தி PMI குறியீடு மே மாதம் 58.7 ஆக உயர்ந்து உச்சத்தை தொட்டு உள்ளது. இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தேவை அதிகரித்த காரணத்தால் இந்தியாவின் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
இப்படி அனைத்து பிரிவுகளிலும் இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும் வேளையில், இந்த கூட்டத்தில் ரெப்போ விகித்தை உயர்த்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதில் முக்கியமாக பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால் ரெப்போ விகிதம் உயர்த்தாமல் இருக்க சாதகமாக சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 8ஆம் தேதி இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பார், மேலும் சர்வதேச பொருளாதாரமும் மந்த நிலையில் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது.
MPC கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் 2000 ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்புகள் கட்டாயம் இருக்கும், இதற்கான விளக்கம், இதன் தாக்கம், எதிரொலி குறித்த அறிவிப்பு இருக்கும். முக்கியமாக கிளீன் நோட் பாலிசி குறித்தும் செப்டம்பர் 30க்கு பின்பு 2000 ரூபாய் நோட்டுகளின் நிலை என்ன என்பது குறித்தும் அறிவிப்புகள் இருக்கும்.


Click it and Unblock the Notifications