இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்ட முடிவுகளை வருகிற வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் ஆர்பிஐ தனது ரெப்போ விகிதத்தை அதிகரிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் வளர்ச்சி அளவை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் செய்யாது என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் இந்தக் கூட்டத்தில் பணவீக்கம் குறித்த கணிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. கொரோனா 2வது தொற்றுக்குப் பின்பு உற்பத்தியாளர்கள் தங்களது வர்த்தகப் பாதிப்பு மற்றும் நஷ்டத்தின் அளவுகளைப் பொருட்கள் மீது திணிக்கும் காரணத்தால் பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
நுகர்வோர் சந்தை
பொருட்களின் விலை உயர்வால் நுகர்வோர் சந்தை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதனால் நாட்டின் பணவீக்கமும் படிப்படியாக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் உற்பத்தி பணிகள் சூடுப்பிடித்துள்ள இந்த வேளையில் பணவீக்கம் என்பது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் சுமை.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்
இதேபோல் கடந்த வாரம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பணவீக்க உயர்வை பொருட்படுத்தாமல் வட்டியை உயர்த்தாமல் வைத்துள்ளது. இதேபோல் இந்தத் தளர்வு சில காலம் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
பணப்புழக்கம்
குறிப்பாக இந்த ஆண்டுக்குப் பின்பு பெடரல் ரிசர்வ் வங்கி அமெரிக்காவில் தற்போது இருக்கும் அதிகப்படியான பணப்புழக்கத்தைக் குறைத்து வட்டியை உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
வட்டி உயர்வு குறித்து அமெரிக்கா முன்கூட்டியே சிக்னல் கொடுத்துள்ளதால் இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரீடைல் பணவீக்கம்
இந்தியாவில் தற்போது ரீடைல் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கி 6 சதவீதத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் மே மாதத்தில் 6.30 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 6.26 சதவீதமாகவும் உள்ளது. ஜூலை மாதத்தில் இதன் அளவு கணிசமாக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications