இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழுவின் (MPC) 2 நாள் கூட்டம் வருகிற டிசம்பர் 4-6 ஆகிய தேதிகளில் கூடுகிறது. ஒருபக்கம் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்களின் பதவி காலம் நீட்டிப்பது குறித்து பிரதமர் அலுவலகம் முக்கியமான முடிவை எடுக்க உள்ள நிலையில் இந்த நாணய கொள்கை குழு கூட்டம் நடக்க உள்ளது.
கடந்த 30 மாதங்களில் முதல் முறையாக, ஆர்பிஐ-யிழ் நாணயக் கொள்கை குழு நாட்டின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதை விட, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இது மிகவும் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான மிகவும் மந்தமான வளர்ச்சியாகும். இந்தியா உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் திறனை இந்த மந்த நிலை பெரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், ஆண்டுக்கு 8% வளர்ச்சி என்ற இலக்கை அடையவும் கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகள் தேவைப்படும் என்று கூறப்படும் வேளையில். இதை இந்த நாணய கொள்கை கூட்டத்தின் வாயிலாகச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலாண்டில் பொருளாதார வளர்ச்சி தற்காலிக காரணங்களால் மந்தமடைவது இயல்பு, இது பெரும்பாலான நாடுகளில் நடக்க கூடியதும் தான், ஆனால் இரண்டாவது காலாண்டின் தொடர்ச்சியான வீழ்ச்சி கவலைக்குரியது. இதுதான் இந்தியாவில் தற்போது நடந்துள்ளது.
இந்த மந்த நிலை தொடர்ந்து மூன்றாவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பும் நம்பிக்கை அளிக்கவில்லை. இதனால், இந்த நிதியாண்டில் 7.2% வளர்ச்சியை RBI கணித்துள்ளதை அடையுமா என்பது பெரும் சந்தேகமாக உள்ளது.
உலகளவிலும் பொருளாதார நிச்சயமின்மை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் புதிய டிரம்ப் அரசு ஆட்சிக்கு வந்தால், 3 நாடுகள் மீது பெரிய அளவிலான வரியை விதிக்க தயாராக இருக்கும் காரணத்தால் சர்வதேச வர்த்தகக் கொள்கைகளிலும் மாற்றம் நடக்கும். இது நேரடியாகவும், மறைமுகமாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிப் பாதை கூடுதலாக சிக்கலடையலாம்.
இதனால் வழக்கத்தை காட்டிலும் தற்போது வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் வட்டி விகிதம் குறைப்பதும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், விலைவாசி உயர்வுடன் போராடி வரும் RBI, டிசம்பர் 6 அன்று வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்பது தான் சந்தையின் கணிப்பு.


Click it and Unblock the Notifications