ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்த இருமாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் அதிகரித்து 5.50 சதவீதமாக உயர்த்தப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆர்பிஐ-யின் இத்தகைய முடிவை எடுக்க அடிப்படை காரணமாக இருப்பது நாட்டின் பணவீக்கம் தான்.
இந்தியாவின் ரீடைல் பணவீக்கம் ஜூலை மாதம் 4.45 சதவீதமாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 4.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆர்பிஐ நாட்டின் பணவீக்கத்தை 4 சதவீதமாக நிலைநாட்ட முடிவு செய்திருக்கும் வேளையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ரீடைல் பணவீக்கம் கடந்த 3 மாதங்களாக 4 சதவீத இலக்கை காட்டிலும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் உயர்வதற்கு 2 முக்கியமான காரணம் உள்ளது.
வளைகுடாவில் உருவாகியுள்ள போர் சூழ்நிலை காரணமாகக் கச்சா எண்ணெய் சப்ளை முடங்கி பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது, ஈரான் போர் துவங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல் இருந்து வருவதால் இந்தியா போன்ற இறக்குமதி கச்சா எண்ணெய் மட்டுமே நம்பியிருக்கும் நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அடுத்தாக இந்தியாவில் எல் நினோ காரணமாகப் பருவமழை சுமார் 30 சதவீதம் வரையில் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது, இந்தியாவில் பல மாநிலத்தில் தண்ணீர் சேமிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு தானியங்கள் முதல் காய்கறி வரையில் விலை உயரத் துவங்கியுள்ளது.
2027ஆம் ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் இந்தியாவில் Food Crisis நிலை உருவாகவும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் நாட்டின் பணவீக்கத்தை உயர்த்தி வருகிறது. மேலும் ரீடைல் பணவீக்கத்தை அளவிடும் சில பொருட்களின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 6 -19 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இது மார்ச் மாதத்தில் 13 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ இன்று வெளியிடும் நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் உயர்வைத் தாண்டி ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாட்டைக் கவனிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது, இந்த கொள்கை நிலைப்பாடு தான் அடுத்தடுத்த கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்துமா அல்லது கட்டுப்படுத்துமா என்பதை முடிவு செய்யும்.


Click it and Unblock the Notifications


