இந்தியாவில் வங்கிகள் கடன்களை வசூல் செய்யும் பணிகளை ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கின்றன. இந்த ஏஜென்சிகளை சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களை மிரட்டுவது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சாமானிய மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
வங்கி கடன் வசூல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்படும் நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி , கடன் வசூலில் கெடுபிடி காட்ட கூடாது என புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

கடன் வாங்கியவர்கள் திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மேற்கொள்ளும் கடன் வசூலிப்பு நடவடிக்கைகளில் நிலவும் முறையற்ற போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி கடன் வசூல் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கண்ணியமாகவும், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும் மட்டுமே நடந்துகொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.
கடன் வசூலிப்பதற்காக வங்கி அல்லது நிதி நிறுவனம் நியமிக்கும் முகவர்கள், வாடிக்கையாளர்களிடம் எந்தவிதமான அத்துமீறலிலும் ஈடுபடக்கூடாது. கடன் பெற்ற நபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலோ, மிரட்டும் வகையிலோ அல்லது அச்சுறுத்தும் வகையிலோ பேசுவது அல்லது நடந்துகொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடன் வசூலிக்கும் முகவர்கள் வாடிக்கையாளர்களை தொடர்புகொள்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே அவர்கள் வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ள முடியும். காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ல வேண்டும் மற்ற நேரங்ஜளில் தொடர்பு கொண்டால் அந்த முகவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடிக்கையாளர்களுடன் கடன் வசூலிக்கும் முகவர்கள் மேற்கொள்ளும் அனைத்து தொலைபேசி உரையாடல்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. எதிர்காலத்தில் வாடிக்கையாளர் தரப்பில் ஏதேனும் புகார்கள் எழுந்தால், அந்த உரையாடல்களை ஆதாரமாக பயன்படுத்த இது உதவும்.
கடன் வசூலிக்கும் செயல்முறை, வாடிக்கையாளரின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது அண்டை வீட்டாரிடம் கடன் விவரங்களை தெரிவிப்பதோ அல்லது அவர்களை அழைத்து தகாத வார்த்தைகளால் பேசுவதோ கடுமையான விதிமீறலாக கருதப்பட்டு வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவை வழங்கும் வகையில், கடன் வசூலிப்பு தொடர்பாக வரும் புகார்களை தீர்க்க ஒரு வலுவான அமைப்பை உருவாக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வழிமுறைகளை வங்கிகள் எளிமையாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் என்பது திரும்ப செலுத்த வேண்டியது தான் , ஆனால் அதை வசூலிக்கும் முறை நாகரீகமானதாக இருக்க வேண்டும் என்பதே ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதலின் நோக்கமாகும். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிகளின்படி, கடன் வசூலிக்கும் முகவர்கள் யாராவது எல்லை மீறி நடந்துகொண்டாலோ அல்லது மிரட்டினாலோ, வாடிக்கையாளர்கள் உடனடியாக அந்தந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் தலைமையகத்திற்கு புகார் அளிக்கலாம். அங்கிருந்து தீர்வு கிடைக்காத பட்சத்தில், ரிசர்வ் வங்கியின் Banking Ombudsman தளத்தில் புகார் பதிவு செய்யலாம்.
வங்கியின் கடன் வாங்கி ஸ்மார்ட்போன்களை வாங்கியவர்கள் கடன்களை திரும்ப செலுத்தாத பட்சத்தில் அந்த போனின் சில அம்சங்களை வங்கிகள் கட்டுப்படுத்தலாம் என்றும் இதற்கு 30 நாட்கள் முன்னதாகவே சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு தெரிவிக்காமல் அவர்களின் செல்போன்களை முடக்க முடியாது.
மேலும் கடனை கட்டாததால் ஒரு நபரின் செல்போன் முடக்கப்பட்டுவிட்டது இந்நிலையில் அவர் கடனை செலுத்திவிட்டால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த போனின் முழு செயல்பாடுகளும் வழக்கம் போல இயங்கும் அனுமதியை வங்கிகள் தர வேண்டும். அப்படி ஒரு மணி நேரத்திற்குள் இந்த அணுகல் தரப்படாவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு 250 ரூபாய் என அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுளது. இந்த விதிமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications


