மும்பை: பொதுவாக நாம் வங்கிகளில் கடன் வாங்கும் போது கடன் தொகை மற்றும் வட்டி தொகையோடு மட்டுமல்லாமல் பிராசசிங் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இந்த மறைமுக கட்டணங்கள் குறித்து முன்கூட்டியே வாடிக்கையாளரிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலவி வருகிறது. இந்த நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் வழிமுறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர் அல்லது கடன் பெற விண்ணப்பம் செய்வோரிடம் கடன் தொகை, அதற்கான வட்டி, கடன் செலுத்துவதற்கான காலம் ஆகியவற்றோடு கடனுக்காக வசூலிக்கப்படும் பிராசசிங் கட்டணம், ஆவண கட்டணம் உள்ளிட்ட அனைத்து மறைமுக கட்டணங்கள் குறித்தும் வெளிப்படையாக முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
இதனை ஆவணமாகவே வாடிக்கையாளரிடம் முன்கூட்டியே வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த கட்டணங்களை கண்டு பரிசீலனை செய்து கடன் வாங்குவது பற்றிய முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கிகள் கடன் வழங்கும் செயல்முறைகளில் வெளிப்படை தன்மையை கொண்டு வர ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மிக முக்கியமானதாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு கடனுக்கும் வழங்கப்படக் கூடிய கீ ஃபேக்ட் ஸ்டேட்மென்ட் எனப்படும் விவர அறிக்கையில் அந்த கடனுக்கான பிராசசிங் கட்டணம், ஆவண கட்டணம் போன்ற விவரங்களையும் வெளியிட வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. வங்கிகள் மட்டுமல்லாமல் நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் முறையில் கடன் வழங்கக்கூடிய செயலிகள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.
வீட்டு கடன், வாகன கடன், நகை கடன், தனிநபர் கடன் போன்ற சிறு கடன்கள் மட்டுமல்லாமல் சிறு குறு நடுத்தர தொழில் கடன்களுக்கும் இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட வேண்டும். எனவே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும் போது அவர்கள் வசூலிக்க கூடிய கூடுதல் கட்டணங்களை பற்றி இனி நாம் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு கட்டணங்கள் குறித்த ஆவணம் வழங்கப்படும் போது வாடிக்கையாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அதில் தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கீ ஃபேக்ட் ஸ்டேட்மெண்ட் என்பது தனித்துவமான ஒரு எண்ணை கொண்டிருக்கும் என்றும் இதன் காலம் என்பது மூன்று வேலை நாட்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவர அறிக்கையில் உள்ள கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் வாடிக்கையாளர் கடனை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications