இந்திய மக்கள் எளிய கடன், விரைவான கடன் பல பெயர்களில் ஈர்த்து பெரும் கடன் வலையில் சிக்க வைத்து மக்களைப் பாடாய்ப்படுத்தும் கடன் செயலிகளின் ஆட்டத்தை முடிக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்ய களத்தில் இறங்கியது.
இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு கடன் சேவை வழங்கும் 94 செயலிகளைத் தடை செய்தது. இந்த விஷயம் டிஜிட்டல் கடன் சேவையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பல நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், இன்று ஆர்பிஐ விளக்கம் கொடுத்துள்ளது.
ஆர்பிஐ எந்தக் கடன் செயலிகளையும் தடை செய்யவில்லையாம்..!
கடன் செயலிகள்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 138 பெட்டிங் ஆப் மற்றும் சீனா நிறுவனம் அல்லது சீன நபர்கள் உடன் தொடர்புடைய 94 கடன் வழங்கும் செயலிகளைத் தடை செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
ஆர்பிஐ
இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்பிஐ கவர்னர் உடன் நாணய கொள்கை கூட்டத்தில் இருக்கும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் ஆர்பிஐ எந்தக் கடன் செயலிகளையும் தடை செய்யவில்லை. ஆர்பிஐ கீழ் நிர்வாகம் செய்யப்படும் செயலிகளின் லிஸ்ட் மட்டுமே அனுப்பினோம் எனத் தெரிவித்தது.
துணை கவர்னர் ராஜேஷ்வர் ராவ்
மத்திய அரசு, ஆர்பிஐ மூலம் முறையாக நிர்வாகம் செய்யப்படாத கடன் செயலிகளை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்க உத்தரவிட்டதாக என ஆர்பிஐ துணை கவர்னர் ராஜேஷ்வர் ராவ் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பிலும் இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) "urgent" மற்றும் "emergency" அடிப்படையில் சீனா நிறுவனம் அல்லது சீன நபர்கள் உடன் தொடர்பு கொண்ட கடன் செயலிகளைத் தடை செய்யும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது.
903 புகார்கள்
ஏப்ரல் 1, 2022 முதல் நவம்பர் 30, 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 903 புகார்கள் கடன் செயலிகள் மூலம் மக்களை ரெக்கவரி ஏஜென்ட்கள் தொல்லை செய்கிறார்கள், இது மட்டும் அல்லாமல் கடன் வாங்கியவர்களிடம் மிகவும் தவறாக நடந்துகொள்கிறார்கள் எனப் புகார் செய்யப்பட்டு உள்ளது.
500 செயலிகள்
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பாதகம் எனக் கூறி சுமார் 250 சீன செயலிகளைத் தடை செய்தது. தற்போது பின்டெக் மற்றும் பெட்டிங் துறையில் கூடுதலாக 232 செயலிகளைத் தடை செய்யும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்பிஐ ஆய்வு
2021ல் கடன் செயலிகள் குறித்து ஆர்பிஐ தனிக் குழுவை அமைத்து ஆய்வு செய்த போது அதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆர்பிஐ விதிமுறைகளுக்குக் கீழ் இயங்குவதும் இல்லை, அதன் கட்டுப்பாட்டுக்கும் வருவது இல்லை எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications