ஈரான் போர் இந்தியாவின் பொருளாதாரத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எல்பிஜி தட்டுப்பாடு ஹோட்டல் உணவுகளின் விலைகளை உயர்த்தி இருக்கிறது. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியுள்ளன.
இந்த சூழலில் 2026 - 27 ஆம் நிதியாண்டிற்கான முதல் நாணயக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் தொடங்கி இருக்கிறது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்குமா அல்லது அதே அளவில் நீட்டிக்கச் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி 1.25% வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் ஒரு சதவீதத்திற்கும் மேல் குறைந்தது. வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு பல லட்சங்கள் சேமிக்கப்பட்டன.

ஈரான் போர் சூழலுக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டின் முதல் நாணயக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது. ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் நாட்டின் தற்போதைய பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் , ஏற்றுமதி, இறக்குமதி, ஈரான் போரால் இந்தியாவில் ஏற்பட்டிருக்க கூடிய தாக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதனை அடுத்து புதன்கிழமை காலை 10 மணிக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் சஞ்சய் மல்கோத்ரா இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவுகளை வெளியிடுவார். பொதுவாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் என்றாலே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கும். ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டி. இந்த வட்டி குறைக்கப்படும்போது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டியை குறைக்கின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஒரு சதவீதத்திற்கும் மேல் நம்முடைய வீட்டு கடன் மற்றும் வாகன கடன் ,தங்க நகை கடன்களுக்கான வட்டிகள் குறைந்தன. இந்த ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. இந்த நிலையில் குட் ரிட்டர்ன்ஸ் நடத்திய வாக்கெடுப்பில் 92% பங்கேற்பாளர்கள் ரிசர்வ் வங்கி இந்த முறை ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றம் இல்லாமல் 5.25% என்ற அளவிலேயே நீட்டிக்கச் செய்யும் என தெரிவித்திருக்கின்றனர்.
அதாவது பெரும்பாலானவர்கள் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தாது என தெரிவித்திருக்கின்றனர். அதே வேளைல் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சில அறிவிப்புகளை ஆர்பிஐ வெளியிடலாம் என சொல்லப்படுகிறது. மேலும் நாட்டின் பணவீக்க இலக்கினை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி என்றால் பல்வேறு பொருட்களின் விலை வாசி உயரும் என அர்த்தம்.


Click it and Unblock the Notifications