பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் முதல் NBFC வரையில் வராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் ஆர்பிஐ 360 கோணத்திலும் வங்கி விதிமுறைகளை நிதியியல் நிறுவனங்கள் கடைப்பிடிக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனிடையில் பல வங்கிகளுக்கு பல முறை அபராதம் விதித்த நிலையில் ஆர்பிஐ மீண்டும் தனது சாட்டையை சுழற்றியுள்ளது.
பல்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட மூன்று அரசு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடன்கள் மற்றும் அட்வான்ஸ்களில் சட்டப்பூர்வ மற்றும் பிற கட்டுப்பாடுகள், இன்ட்ரா-குரூப் பரிவர்த்தனைகள் மற்றும் வெளிப்பாடுகளை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்கள், குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய சில முக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால் ஆர்பிஐ, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மீது ரூ.1.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதோடு கடன்கள் மற்றும் அட்வான்ஸ்களில் சட்டப்பூர்வ மற்றும் பிற கட்டுப்பாடுகள், KYC மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்) டைரெக்ஷன்ஸ் 2016 தொடர்பான சில வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியன் வங்கிக்கு ரூ.1.62 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பஞ்சாப் & சிந்து வங்கியின் வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதித் திட்டத்தின் சில விதிகளுக்கு இணங்காததற்காக ரூ. 1 கோடி வரையிலான பண அபராதம் விதிக்கப்பட்டதாக ஆர்பிஐ தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
NBFC அமைப்புகளில் சில நிதி மோசடியைக் கண்காணிப்பதற்கான வழிகாட்டுதல்களின் சில விதிகளுக்கு இணங்காததற்காக Fedbank Financial Services மீது ரிசர்வ் வங்கி ரூ.8.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது ஆர்பிஐ.
இந்த அபராதங்கள் எந்தவொரு நிதி பரிவர்த்தனை அல்லது மக்கள் செய்துள்ள டெபாசிட் தொகையை சார்ந்தது இல்லை, இது அனைத்தும் ஒழுங்கு முறை நடவடிக்கைகள் மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதங்கள் என விளக்கம் கொடுத்துள்ளது ஆர்பிஐ. இதனால் இவ்வங்கிகளில் இருக்கும் மக்களின பணத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்பதையும் விளக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications