சில ஒழுங்குமுறை விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறிய எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2.50 கோடி அபராதம் விதித்தது.
நம் நாட்டில் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கி வகுத்த விதிமுறைகளை பின்பற்றி தான் செயல்பட வேண்டும். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியும் நிதி நிறுவனங்களை தணிக்கை போன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும்.

ஆனாலும் சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்படுகின்றன. அப்படி விதிமுறைகளை மீறிய அல்லது கடைப்பிடிக்க தவறிய நிறுவனங்களை கண்டுபிடித்து அவற்றுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது.
அந்த வகையில் தற்போது வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனம் வட்டி விகிதங்கள் தொடர்பான சில ஒழுங்குமுறை விதிகளை கடைப்பிடிக்க தவறியதற்காக அபராத நடவடிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் 2021 மார்ச் 31 மற்றும் 2022 மார்ச் 31 நிலவரப்படி எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையை ஆய்வு செய்தது.
எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனம் அதன் சில்லரை கடன் வாங்குபவர்களுக்கு வழங்கும் கடன் விண்ணப்ப படிவத்தில் அல்லது அனுமதி கடிதத்தில், பல்வேறு வகையான கடன் வாங்குபவர்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிப்பதற்கான இடர்பாடு மற்றும் காரணங்களை குறிப்பிடவில்லை.

இது போன்ற விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்பட்டதை இந்திய ரிசர்வ் வங்கி கண்டுபிடித்து தற்போது அபராதம் விதித்துள்ளது. விதிமுறைகளுக்கு இணங்காததால் எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2.50 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிய நோட்டீஸில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு இணங்க தவறிய நிறுவனத்திற்கு ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications