ரிசர்வ் வங்கி (RBI) இந்திய பத்திர சந்தைக்கு வெளிநாட்டு முதலீட்டை கூடுதலாக ஈர்க்கும் முக்கிய நடவடிக்கையை இன்று நடந்த நாணய கொள்கை கூட்டத்தில் அறிவித்துள்ளது. ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், Voluntary Retention Route (VRR) என்ற சிறப்பு முதலீட்டு பாதையில் உள்ள ரூ.2.5 லட்சம் கோடி மொத்த வரம்பு நீக்கப்படுகிறது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கூடுதல் இடவசதியை உருவாக்கும் என தெரிவித்தார்.
Voluntary Retention Route (VRR) என்றால் என்ன?
VRR என்பது நீண்டகால வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க உருவாக்கப்பட்ட சிறப்பு திட்டம். இதில் முதலீடு செய்யப்படும் தொகையில் குறைந்தபட்சம் 75% தொகையை மூன்று ஆண்டுகள் இந்தியாவில் வைத்திருக்க வேண்டும். இதற்கு பதிலாக ஆர்பிஐ மற்றும் இந்திய அரசு சில ஒழுங்குமுறை தளர்வுகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்படுகிறது. இது குறுகிய கால வர்த்தகர்களை விட நிலையான முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்ன மாற்றம் நடக்கிறது?
முன்பு VRR மூலம் மொத்தமாக ரூ.2.5 லட்சம் கோடி மட்டுமே முதலீடு செய்ய முடியும். இப்போது இந்த மொத்த வரம்பு முழுவதும் நீக்கப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் நிலையான லாபத்தை தரும் பத்திர சந்தையில் அதிகப்படியான முதலீட்டை குவிப்பார்கள். பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் காரணத்தால் கடந்த சில மாதங்களாக பத்திர சந்தை மீதான முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
இதேபோல் பங்குச்சந்தை தடுமாற்றத்தால் பங்குச்சந்தையில் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளும் குறைந்து வருகிறது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் குறைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பத்திர சந்தையில் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது. VRR முதலீடுகள் என்பது இயல்பான "ஜெனரல் ரூட்" வரம்புகளுக்கு கூடுதலாக வரும் முதலீட்டு தொகை.
VRR திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் முதலீட்டு கருவிகள்
VRR-Govt (அரசு பத்திரங்கள்): இந்திய அரசு பத்திரங்கள் (Government Securities) - Dated Securities, கருவூல பத்திரங்கள் (T-bills), மற்றும் மாநில வளர்ச்சி கடன்கள் (State Development Loans - SDLs) ஆகியவை VRR திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன. இவை அரசு பாதுகாப்புடன் கூடிய நீண்டகால மற்றும் குறுகியகால பத்திரங்கள் ஆகும்.
VRR-Corp (கார்ப்பரேட் கடன் கருவிகள்): கார்ப்பரேட் கடன் கருவிகள் - FEMA விதிமுறைகளின் Schedule 5-இல் பட்டியலிடப்பட்டவை. இதில் Non-Convertible Debentures (NCDs) மற்றும் Commercial Papers (CPs) ஆகியவை அடங்கும். இவை தனியார் நிறுவனங்கள் வெளியிடும் கடன் கருவிகளாகும்.
இந்த இரு வகை கருவிகளும் Voluntary Retention Route (VRR) திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன. இது நீண்டகால மற்றும் நிலையான முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஏன் முக்கியம்?
இந்த மாற்றம் மூலம் இந்திய சந்தையில் நிதி ஸ்திரத்தன்மை மேம்படுத்தப்படுவது மட்டும் அல்லாமல் நீண்டகால உலகளாவிய மூலதனத்தை ஈர்க்கிறது. அரசு மற்றும் நிறுவனங்கள் பத்திர சந்தையில் கூடுதல் முதலீட்டை பெற உதவுகிறது. தற்போது முதலீட்டு வரம்பு நீக்கப்படுவது மூலம் பத்திர சந்தை இந்தியாவில் வலுப்பெறுகிறது. குறுகிய கால ஏற்ற இறக்கமான பணத்தை சார்ந்திருப்பது குறைகிறது. இது இந்திய பொருளாதாரத்தை மேலும் உறுதியாக்கும் நடவடிக்கையாகும்.
வெளிநாட்டு முதலீடு அதிகரித்தால் பத்திர சந்தை வலுவடையும். அரசு மற்றும் நிறுவனங்கள் கடன் எடுக்கும் செலவு குறையும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நீண்டகாலத்தில் வங்கி கடன் மற்றும் வட்டி விகிதங்களில் நிலைத்தன்மை அதிகரிக்கும். இந்த முடிவு இந்தியாவின் நிதி சந்தையை உலகளவில் மேலும் ஈர்க்கும்.


Click it and Unblock the Notifications