இந்திய ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நாணயக் கொள்கை குழு கூட்டத்தை நடத்தும். இந்தக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது?, வர்த்தகம் சிறப்பாக இருக்கிறதா? பணப்புழக்கம் நன்றாக இருக்கிறதா? என்பதையெல்லாம் பொறுத்து வட்டி உயர்வு அல்லது வட்டி குறைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாணய கொள்கை குழு என்பது ரிசர்வ் வங்கியின் கீழ் இருக்கும் ஒரு அமைப்பு அவ்வளவுதான். ஒவ்வொரு முறையும் இந்த கூட்டம் நடைபெற்ற பிறகு ரெப்போ விகிதங்களில் மாற்றம் இருக்குமா என மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.
ஏன் தெரியுமா? இன்றைய விலைவாசி உயர்வுக்கு மத்தியில் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒரு கடனாவது இருக்கிறது. வீட்டு கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என தங்களுக்கு தேவைப்படும் கடன்களை மக்கள் வாங்கி வைத்திருக்கின்றனர். இதில் சிலர் ஃபிக்சட் டெபாசிட் போன்ற வருமானம் ஈட்டும் முதலீடுகளிலும் முதலீடு செய்திருக்கின்றனர்.
இதுபோன்ற நபர்கள் ஏன் ரெப்போ விகிதத்தைக் கண்காணிக்கின்றனர் என்ற விபரங்களை பார்ப்போம். நாணய கொள்கை குழு கூட்டம் இந்த முறை ஜூன் 3 முதல் ஜூன் 5 வரை இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி உயரப் போகிறதா? அல்லது குறையப் போகிறதா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ரெப்போ ரேட் என்றால் என்ன?: நமக்கு தேவைப்படும் போது நாம் எப்படி வங்கிகளுக்குச் சென்று கடன் வாங்குகிறோம். அதே போல தான் வங்கிகளும் தங்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டால் நம் நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும். இப்படி கடன் பெறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி என்ன வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறதோ அதைத்தான் ரெப்போ ரேட் எனக் கூறுகிறோம். ஆர்பிஐ வங்கிகளுக்கு அதிக வட்டியில் கடன் வழங்கினால், வங்கிகளும் அதை ஈடுகட்ட மக்களின் தலையில் வைப்பார்கள். ஒருவேளை ஆர்பிஐ குறைவான ரெப்போ விகிதத்தில் கடன் வழங்கினால் நமக்கும் வட்டி குறையும்.
பண வீக்கம் அதிகரித்தால் ரிசர்வ் வங்கி உடனே ரெப்போ விகிதத்தை அதிகரிக்கும். அதாவது மக்கள் கையில் பணப்புழக்கத்தை குறைப்பதற்காகவே இந்த வட்டி உயர்வு அறிவிக்கப்படும். உதாரணமாக வட்டி அதிகமானால் மக்கள் என்ன செய்வார்கள்? லோன் வாங்குவதை குறைக்க தொடங்குவார்கள். வட்டி குறையட்டும் பிறகு கார் வாங்கிக் கொள்ளலாம், பிறகு வீடு கட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வருவார்கள். இதனால் டிமாண்ட் குறையும். உடனே விலைவாசியும் கட்டுக்குள் வரும்.
கொரோனா சமயத்தில் நாட்டின் பொருளாதார மிகவும் மந்த நிலையில் இருந்தது. மக்கள் பயந்து போய் கையில் பணத்தை வைத்துக்கொண்டு செலவு செய்ய அஞ்சி நடுங்கினர். அப்போது ஆர்பிஐ உடனடியாக வட்டியை குறைத்தது. வட்டி குறைந்தவுடன் அதையே சாக்காக பயன்படுத்தி ஹோம் லோன் மற்றும் பிற லோன்களை மக்கள் வாங்கினர். மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்தால் கடைகளில் வியாபாரமும் சூடு பிடிக்கும். பொருளாதாரமும் வேகமாக வளரும். இதுதான் இந்த வட்டி குறைப்பு மற்றும் உயர்வுக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்.
நாம் இதை ஒரு உதாரணத்தோடு பார்ப்போம். நீங்கள் ரூ.50 லட்சம் வீட்டு கடன் வாங்கியிருக்கிறீர்கள். இதன் கடன் காலம் 20 ஆண்டுகள் மற்றும் வட்டி விகிதம் 8.25 சதவீதம். ஃப்ளோட்டிங் வட்டியில் கடன் பெற்றிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வங்கிகள் 2 விதமாக கடன் வழங்கும். ஒன்று ஃபிக்சட் வட்டி, மற்றொன்று ஃப்ளோட்டிங் வட்டி. ஃபிக்சட் வட்டி என்றால் உங்கள் கடன் காலன் முழுவதும் வட்டி விகிதம் மாறாது. ஃப்ளோட்டிங் வட்டி என்றால் ரெப்போ விகிதத்தை பொறுத்து இந்த வட்டியும் மாறுபடும்.
அதாவது நீங்கள் பெற்ற ரூ. 50 லட்சம் கடனுக்கு ரூ. 42,603 இஎம்ஐ செலுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆர்பிஐ தற்போது 5.25 சதவீதமாக வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. அதை 5 சதவீதமாக குறைத்தால், உங்கள் வங்கியும் 0.25% வட்டி விகிதத்தை குறைக்கும். எனவே ஏற்கனவே நீங்கள் 8.25 சதவீதத்திற்கு வாங்கிய கடன் 8 சதவீதமாகக் குறையும். இதன் விளைவாக உங்களுடைய ஈஎம்ஐ ரூ.41,822-ஆகக் குறையும். ஆக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 781 சேமிக்க முடியும். இதை ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டால் ரூ. 9,372 வரும். கடன்காலம் முழுவதும் அதாவது 20 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ரூ. 1.8 லட்சம் வரையில் சேமிக்கலாம்.
இது முதலீட்டாளர்களுக்கு நல்லதல்ல. ஒருவேளை வட்டி விகிதம் குறைந்தால் நீங்கள் போடும் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தையும் வங்கிகள் குறைக்கும். உதாரணமாக ஏற்கனவே நீங்கள் 5.25 சதவீதமாக ரெப்போ விகிதம் இருக்கும்போது டெபாசிட் செய்திருக்கிறீர்கள். அப்போது உங்களுடைய வங்கி உங்களுக்கு 6.75% வட்டி விகிதத்தில் FD வழங்குகிறது. அதன் பிறகு 5% குறைந்தால், வங்கிகளும் உங்களுக்கு கொடுத்த 6.75% வட்டி விகிதத்தை குறைக்கும். இதனால் FD முடியும் காலத்தில் உங்கள் கையில் கிடைக்கும் வருமானம் குறையும்.


Click it and Unblock the Notifications