இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் தனது ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆர்பிஐ விதிகளின் படி அப்பர் லேயர் நிதி நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும், இதன் படி டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதை தவிர்க்க டாடா நிர்வாகம் தனது கோர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி மற்றும் NBFC லைசென்ஸ்-ஐ ஆர்பிஐ-க்கு திருப்பி அளிக்க முடிவு செய்து ஆர்பிஐ-யிடம் அனுமதி கோரியது. ஆனால் ஆர்பிஐ கடந்த வாரம் இதற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தால் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டிய நிலை உருவாக்கியுள்ளது.

டாடா நிர்வாக குழுவிற்கு டாடா சன்ஸ் நிறுவனத்தை பட்டியலிடுவதில் துளியும் விருப்பமில்லை, இதேவேளையில் சந்திரசேகரனுக்கு சேர்மன் பதவி கொடுக்காதது பெரும் சிக்கலை டாடா குழுமத்திற்கு உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் முதலீட்டு சந்தையில் 2 கேள்விகள் எழுந்துள்ளது.. 1. டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு என்ன..? 2. SP குரூப் தன்னிடம் இருக்கும் 18 சதவீத டாடா சன்ஸ் பங்குகளை எப்படி விற்கப்போகிறது..?
இந்திய பங்குச்சந்தையில் பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் ஹோல்டிங்க்ஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட், JSW ஹோல்டிங்க்ஸ், ஜெஎம் பைனான்சியல் என 15க்கும் அதிமான ஹோல்டிங் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த வரிசையில் முதல் கேள்விக்கான பதில் கிட்டத்தட்ட கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
டாடா சன்ஸ் என்பது ஒரு ஹோல்டிங் நிறுவனம், இந்த நிறுவனம் தனியாக வர்த்தகம் எதுவும் செய்யாத காரணத்தால் இந்நிறுனத்திடம் இருக்கும் சொத்துக்களை வைத்து தான் அதன் மதிபீட்டை செய்ய முடியும். அப்படியானால் டாடா சன்ஸ் நிறுவனத்திடம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத டாடா குழும நிறுவனங்களின் பங்குகள் தான் முக்கிய சொத்தாக உள்ளது.
தற்போதைய சந்தை மதிப்பின் படி டாடா சன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 15-16 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால் ஹோல்டிங் கம்பெனி டிஸ்கவுன்ட், பட்டியலிடப்படாத சொத்துக்களின் மதிப்பில் டிஸ்கவுண்ட், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு அளிக்கப்படும் டிஸ்கவுன்ட் என அனைத்தயும் கணக்கில் கொண்டால் 30 முதல் 60 சதவீதம் வரையில் தள்ளுபடி உடன் இந்த ஐபிஐ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் டாடா சன்ஸ் பங்குச்சந்தைக்கு வரும் போது 9 - 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வரும் என முதலீட்டு வங்கியாளர்கள் மற்றும் நிறுவன மதிப்பீட்டு வல்லுனர்களும் கணிக்கின்றனர். பஜாஜ் ஹோல்டிங்ஸ், காட்ரிஜ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவையும் 30-60 சதவீதம் வரையிலான தள்ளுபடியில் தான் பங்குச்சந்தைக்கு அறிமுகமானது.
2வது கேள்வி ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் நீண்ட காலமாக டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் தனது பங்குகளை விற்பனை செய்து பணத்தை திரட்ட வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. காரணம் இக்குழுமம் தற்போது பெரும் கடனில் இருக்கும் காரணத்தால் 25000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
டாடா சன்ஸ் பங்குகளை விற்பதில் வேகம் காட்டி வந்த ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் தற்போது டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் விரைவாக பட்டியலிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் காரணத்தால் காத்திருந்து இந்த ஐபிஓ-வில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை ஆலோசனை செய்ய முடிவு செய்துள்ளது.
தற்போது ஷாப்பூர்ஜி பலோன்ஜி குரூப் டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 18.37 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில் இதன் மதிப்பு 2.3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications


