டெல்லி: இந்தியாவில் வேலை கிடைக்காமல் இளைஞர்கள் தவித்து வருவதாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படும் நிலையில் அதற்கு மாறாக ஒரு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக 4.7 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அன்று இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் என்பது 2023-24 ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 2022-23 ஆம் ஆண்டில் இது 3.2 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6 சதவீதம் என உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
விவசாயம், மீன்பிடிப்பது ,சுரங்கம் ,குவாரி, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு, கட்டுமானம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் இருந்து 27 தொழில்களை மையமாகக் கொண்டு இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது NSO, NSSO, ASI மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து தொகுக்கப்பட்ட எண்களை பயன்படுத்தி தான் இந்த KLEMS தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பெறும் பிரச்சனையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கையானது ஒரு புதிய பார்வையை வழங்கியுள்ளது. கடந்த வாரம் சிட்டி குரூப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் இந்தியா பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் என தெரிவித்திருந்தது.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா 1.2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் ஆனால் வளர்ச்சி விகிதம் 80 முதல் 90 லட்சம் வேலை வாய்ப்புகளை மட்டுமே உருவாக்க அனுமதிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த சூழலில் மத்திய தொழிலாளர் அமைச்சகம் சிட்டி குரூப் இந்தியாவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது. பீரியாடிக் லேபர் ஃபோர் சர்வே (Periodic Labour Force Survey)மற்றும் ஆர்பிஐயின் KLEMS தரவுகளின் படி 2017 - 18 முதல் 2021- 22 வரை இந்தியா 8 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 2020-21 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட போதிலும் இந்தியாவில் சராசரியாக 2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது சிட்டி குரூப்ஸ் இந்தியாவின் அறிக்கைக்கு அப்படியே நேர்மாறாக இருக்கிறது.
மேலும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு அரசு பல முன் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதுவே இவ்வாறு குறிப்பிடத்தக்க அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 -18 ஆம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 2022-23ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது .
story written by: Devika


Click it and Unblock the Notifications