அதானி குழும நிறுவன பங்குகளின் தொடர் சரிவால் கடந்த 7 நாளில் சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்த நிலையில், அதானி குழுமத்திற்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டு உள்ளது என வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளது ஆர்பிஐ.
இதற்கு மத்தியில் இந்திய ரிசர்வ் வங்கி இன்று நாட்டின் வங்கி அமைப்பு மீள்தன்மை உடனும், நிலையானதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்துப் பேசுகையில், இந்திய சந்தைகள் சிறப்பான முறையில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கெளதம் அதானியின் அதானி குழுமத்தைப் பற்றிய சர்ச்சை முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதிக்காது எனத் தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம்
அதானி குழுமத்திற்கு எவ்வளவு கடன் வழங்கப்பட்டு உள்ளது என வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் ரிப்போர்ட் கேட்ட ஆர்பிஐ, இன்று நாட்டின் வங்கி அமைப்பு மீள்தன்மை உடனும், நிலையானதாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆரோக்கியமான அளவீடுகள்
மேலும் போதுமான மூலதன அளவு, சொத்துத் தரம், பணப்புழக்கம், ப்ரொவிஷன் பாதுகாப்பு மற்றும் லாபம் தொடர்பான பல்வேறு அளவீடுகள் ஆரோக்கியமாக உள்ளது. வங்கிகளும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட Large Exposure Framework வழிகாட்டுதல்களின் படி இணங்குகிறது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்திரத்தன்மை
இந்திய வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதுகுறித்து விழிப்புடன் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்திய வங்கிகள் ஒரு வணிகச் சாம்ராஜ்ஜியத்திற்கு மட்டும் அதிகப்படியான கடன் வெளிப்பாடு கொண்டு இருக்கிறது எனச் செய்திகள் வந்த நிலையில் ரிசர்வ் வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
தனி டேட்டாபேஸ்
இந்திய ரிசர்வ் வங்கி Central Repository of Information on Large Credits என்ற தனி டேட்டா பேஸ்-ஐ வைத்துள்ளது. இந்த டேட்டாபேஸ்-ல் 5 கோடி ரூபாய்க்கு அதிகம் கடன் வெளிப்பாடு கொண்ட அனைத்து கடன் விபரங்களும் சேகரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
எல்ஐசி கடன்
அதானி குழுமத்தின் கடன் மற்றும் ஈக்விட்டிக்கு சுமார் 36,474.78 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு இருப்பதை மத்திய அரசுக்குச் சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதானி நிறுவனத்தில் உள்ள நிறுவனங்களுக்கு 27000 கோடி ரூபாய் அளவிலான கடனை வழங்கியுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
இதேபோல் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதானி குழு நிறுவனங்களுக்குச் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிலான தொகையை கடனாகக் கொடுத்துள்ளது எனக் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் தலைவர் அதுல் கோயல் தெரிவித்துள்ளார்.
பாங்க் ஆ பரோடா
மேலும் மற்றொரு பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா அதானி குழும நிறுவனங்களுக்குச் சுமார் 7000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்துள்ளது.
ஐடிஎப்சி வங்கி, இண்டஸ்இந்த் வங்கி
ஐடிஎப்சி வங்கி தனது மொத்த non-funded நிலுவையில் 0.51 சதவீதம் மட்டுமே அதானி குழும நிறுவனங்களைச் சார்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இண்டஸ் இந்த் வங்கியின் 29 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான கடன் புத்தகத்தில் 0.51 சதவீதம் மட்டுமே அதானி குழும நிறுவனங்களைச் சார்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications