இந்தியாவில் வங்கியில் கடன் வாங்கி ஒரு பொருளை வாங்குவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. முன்பெல்லாம் வீடு, வாகனம் வாங்க மட்டுமே கடன்கள் கிடைக்கும். ஆனால் இப்போது நாம் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் போனில் தொடங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் வரை இஎம்ஐ-இல் வாங்க முடிகிறது.
ஒரு பொருளை வாங்க காசு இல்லை அதற்கு வங்கி நமக்கு கடன் தருகிறது, அந்த கடனை வட்டியோடு நாம் மாதாந்திர தவணை முறையில் வங்கியிடம் செலுத்துகிறோம். இவ்வாறு கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்த தவறியவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான சில வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வரைவு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இதன்படி நீங்கள் இஎம்ஐ மூலம் செல்போன் வாங்கி இருக்கிறீர்கள். அந்த கடனை திரும்ப செலுத்தவில்லை பலமுறை நோட்டீஸ் அளித்தும், எச்சரிக்கை விடுத்தும் கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் வங்கிகள் உங்கள் மீது சில நடவடிக்கைகளை எடுக்கலாம். அதாவது அந்த போனின் சில அம்சங்களை நீங்கள் பயன்படுத்த முடியாத வகையில் முடக்க முடியும். ஆனால் மொபைல் போனையே முழுமையாக முடக்கவோ அல்லது டிஸேபிள் செய்யவோ கூடாது, அதற்கு மாற்றாக போனில் சில அம்சங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம் என ஆர்பிஐ வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை குறிப்பிடுகிறது.
மொபைல் போன் வாங்குவதற்காக வாங்கப்பட்ட கடன் திரும்ப செலுத்தப்படாத பட்சத்தில் மட்டுமே அந்த மொபைல் போனின் சில அம்சங்களை முடக்கக்கூடிய செயல்களில் வங்கிகள் ஈடுபட வேண்டுமே தவிர மற்ற கடன்ளுக்கு இது பொருந்தாது என ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது. இது தொடர்பான வரைவு வழிகாட்டுதலில் மொபைல் போன் வாங்குவதற்காக ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார் அந்த கடனை அவர் 60 நாட்களுக்கு மேலாக திரும்ப செலுத்தாமல் நிறுவையில் வைத்திருக்கிறார் எனும் போது வங்கிகள் இது தொடர்பாக அந்த கடனாளிக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது.
நோட்டீஸ் அனுப்பிய பின்னர் 21 நாட்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் 21 நாட்களுக்குப் பின்னரும் கடன் திரும்ப செலுத்தப்படவில்லை எனும் பட்சத்தில் வங்கிகள் மொபைல் போனின் சில அம்சங்களை அந்த நபர் பயன்படுத்த முடியாத வகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது.
அதே வேளையில் போனில் இருக்கும் தரவுகளை வங்கிகள் பெறுவது சேமிப்பது தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடனை திரும்ப வசூல் செய்வதற்காக காலை 8 மணியில் இருந்து இரவு 7 மணி வரை மட்டுமே கடனாளியை தொடர்பு கொள்ள வேண்டும், மற்ற நேரத்தில் செல்வது தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தவறான மற்றும் மிரட்டல் விடுக்கும் வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக மே 31ம் தேதி வரை பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் இது அதிகாரப்பூர்வமாக சட்டமாக கொண்டு வரப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications

