சமீபத்தில் ஜிஎஸ்டி வரி வசூலில் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்தியுள்ளதாக ஒரு தகவல் பரவி வந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் விரைவில் முந்திவிடும் என்ற கருத்துக்கள் சமுக வலைத்தளத்தில் பெருமை உடன் பகிரப்பட்டு வந்தது. இது உண்மையில்லை என்பதை அடிப்படைத் தகவல் வைத்தே யார் வேண்டுமானாலும் கூறிவிட முடியும், ஆனாலும் பகிரப்பட்டது.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்குப் பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்குக் கடன் கொடுப்பது குறித்து ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் இவ்விரு மாநிலங்களின் நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் (MFL) கடன் வழங்கும் நடைமுறைகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி, சமீபத்தில் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் கடன் வழங்குவதைக் குறைத்துக்கொள்ளுமாறு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் குறைந்த வருவாய் கொண்ட பெண்களுக்கு முதன்மையாக வழங்கப்படும், பாதுகாப்பில்லாத கடன்களான மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கடன்களில், இந்த இரண்டு மாநிலங்களின் பங்கீடு மட்டும் 25.3 சதவீதம் ஆகும்.
மேலும், 2019ஆம் ஆண்டு முதல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் மொத்த சொத்து மேலாண்மையில் (Assets Under Management) மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களின் பங்கீடு என்றால் பீகார் மற்றும் உத்தர பிரதேசம் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.
இந்த நிலையில் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் கடன் அளிக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அளித்த எச்சரிக்கையில், சந்தையில் அதிக கடன் வழங்குதல் உள்ளது, குறிப்பாக 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (மார்ச்) மிகத் தெளிவாகக் காணப்படுகிறது எனவே பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களுக்குக் கடன் கொடுப்பதில் எச்சரிக்கை தேவை எனத் தெரிவித்துள்ளது.
மைக்ரோ பைனான்ஸ் கடன் என்பது பாதுகாப்பற்ற கடன் என்பதால் இதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி பார்க்கும் போது பொருளாதாரத்திலும், மக்களின் தனிநபர் வருமானத்திலும் பின்தங்கியிருக்கும் உத்தர பிரதேச மற்றும் பீகாரில் இதற்கான வாய்ப்புகள் சற்று அதிகம்.
அதிலும் இவ்விரு மாநிலத்தின் மொத்த பங்கீடு 25.3 சதவீதமாக இருக்கும் போது நிறுவனங்கள் திவால் ஆகும் அளவிற்கு ஆபத்து உள்ளது என்பதை உணர்ந்து தான் ஆர்பிஐ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications