இந்திய ரிசர்வ் வங்கி 2024 ஆம் நிதியாண்டிற்காக மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட கிட்டத்தட்ட 140% அதிகமாகும். 2023-ம் ஆண்டில், ரிசர்வ் வங்கியிடம் இருந்த உபரி பணமான ரூ.87,416 கோடியை மத்திய அரசுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடைபெற்ற சென்டரல் போர்ட்டின் 608-வது கூட்டத்தில், சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பொருளாதார சூழ்நிலைகள், எதிர்கால வளர்ச்சிக்கான சாத்தியமான அபாயங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், சென்டரல் போர்ட் ரூ.2,10,874 கோடி உபரி தொகையை மத்திய அரசு கஜானாவிற்கு மாற்ற முடிவு செய்தது.

"2018-19 முதல் 2021-22 வரையிலான கணக்கீட்டு ஆண்டுகளில், இந்தியாவில் நிலவிய பொருளாதார சூழ்நிலை மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, நாட்டின் வளர்ச்சி மற்றும் மொத்த பொருளாதார நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக, ரிசர்வ் வங்கியின் Contingency Risk Buffer (CRB) அளவு 5.50 சதவீதமாகப் பராமரிக்க முடிவு செய்திருந்தது," என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து 2023-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, அவசரநிலை ஆபத்து தணிப்பு (CRB) 6% ஆக உயர்த்தப்பட்டது. 2024-ம் ஆண்டிற்காக, பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வலிமை மற்றும் பொருளாதார மீள் தன்மையைக் காட்டும் வகையில், இது மேலும் 6.5% ஆக உயர்த்தப்பட்டது.
"பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகவும் மீள் தன்மையுடனும் இருப்பதால், 2023-24 நிதியாண்டிற்காக ரிசர்வ் விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்த ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. இதையடுத்து, 2023-24 கணக்கீட்டு ஆண்டிற்காக ரூ.2,10,874 கோடியை மத்திய அரசுக்கு மாற்றுவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்தது," என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னதாக வெளியான அறிக்கைகள், ரிசர்வ் வங்கி 2024-ம் ஆண்டிற்கான நிதியாண்டிற்காக மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான டிவிடெண்ட் அளிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 2.1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதி மாற்றம் மத்திய அரசின் நிதி நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பட்ஜெட் பற்றாக்குறை இலக்கை அடைவதற்கும் உதவும்.


Click it and Unblock the Notifications