கிட்டத்தட்ட 18 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் காண்பதற்காக பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அகமதாபாத்திற்கு வருகை தந்திருந்தார். அவருடைய மனைவியும் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகனுமான அக்ஷதா மூர்த்தியும் அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டிகளை நேரில் கண்டு ரசித்தனர்.
ஐபில் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு பேட்டி அளித்திருக்கும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவரும் பிரிட்டனின் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக், கிரிக்கெட் மீதான தன்னுடைய காதல் குறித்தும் தன்னுடைய மனைவியிடம் தன் காதலை தெரிவித்தது குறித்தும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தான் அக்ஷதா மூர்த்தியும் ரிஷி சுனக்கும் சந்தித்துக்கொண்டனர்.

இதனை அடுத்து இருவர் இடையே காதல் மலர்ந்து திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் தற்போது கிருஷ்ணா, அனோஷ்கா என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தன்னுடைய திருமணம் குறித்து பேட்டியில் பகிர்ந்திருக்கும் ரிஷி சுனக், அக்ஷிதா மூர்த்தியிடம் அவருடைய தாய் மொழியான கன்னடத்தில் தான் நான் என்னுடைய காதலை தெரிவித்தேன் அந்த சமயத்தில் எனக்கு அந்த மொழி சரளமாக தெரியாது இருந்தாலும் அதனை கற்றுக் கொண்டு நான் அவரிடம் என்னுடைய காதலை வெளிப்படுத்தினேன் என தெரிவித்திருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த குடும்பத்திலிருந்து நான் பெண் எடுத்திருக்கின்றேன் அதனால் பெங்களூரு அணிக்கு தான் என்னுடைய ஆதரவு என தெரிவித்திருக்கிறார். திருமணமான போது ஆர்சிபி அணியின் ஜெர்சியை என்னுடைய மனைவியின் குடும்பத்தார் எனக்கு பரிசாக வழங்கினர் என சுட்டிக்காட்டி இருக்கும் ரிஷி சுனக், விராட் கோலியின் தீவிர ரசிகன் நான் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பனீஸ், பிரதமர் மோடி ஆகியோருடன் தான் கிரிக்கெட் தொடர்பாக கலந்துரையாடியது தனக்கு நினைவுக்கு வருவதாக அவர் அந்த பேட்டியில் சுட்டிக் காட்டியுள்ளார்.
விராட் கோலி ஒரு ஜாம்பவான் என கூறியுள்ள ரிஷி சுனக், தான் பிரதமராக இருந்த போது இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் , விராட் கோலியின் கையெழுத்து போட்ட பேட் ஒன்றை தனக்கு பரிசளித்ததை குறிப்பிட்டுள்ளார். அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதி போட்டியை கண்டு ரசித்த அவர், இது மாதிரியான ஒரு கிரிக்கெட் அனுபவம் இதுவரை எனக்கு கிடைத்ததே இல்லை என தெரிவித்திருக்கிறார். இது அற்புதமானது , முதன்முறையாக இப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தையும் கிரிக்கெட் அனுபவத்தையும் நான் பெறுகிறேன் என மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications