பெங்களூரு: 2025 ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு மறக்க முடியாத ஒரு நாளாக மாறியிருக்கிறது. கடந்த 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றியை ஆர்சிபி அணி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய வண்ணம் இருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 17 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைத்திருப்பதாக ஆர்சிபி அணி ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றைய தினம் ஐபிஎல் 2025 இறுதி போட்டி நடத்தப்பட்டது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின . இதில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையா, 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் சாம்பியனாக வெற்றி பெற்று இருக்கிறது, இந்த ஆண்டு போட்டி முழுவதுமே ஆர்சிபி அணி திறமையாக விளையாடியது என தெரிவித்துள்ளார். இதற்கு ஆர்சிபி அணி வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அவர் வாழ்த்து கூறியிருக்கிறார்.
தான் ஆர்சிபி அணியை நிறுவிய போது அந்த அணி கோப்பையை வென்று பெங்களூருக்கு அதனை கொண்டு வர வேண்டும் என்பதை கனவாகக் கொண்டிருந்தேன் என குறிப்பிட்டு இருக்கும் விஜய் மல்லையா, விராட் கோலி ஒரு ஜாம்பவான் அவரை ஆர்சிபி அணிக்கு தேர்வு செய்ததில் நான் பெருமை கொள்கிறேன் என கூறி இருக்கிறார். விராட் கோலி 18 ஆண்டுகள் தொடர்ந்து இந்த அணியிலேயே நீடித்ததற்கு நன்றி தெரிவித்திருக்கும் விஜய் மல்லையா, இறுதியாக ஐபிஎல் கோப்பை பெங்களூருக்கு வந்து விட்டது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய கனவை நிறைவேற்றிய அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் மல்லையா தன்னுடைய எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்து விட்ட குற்றச்சாட்டுக்கு ஆளானவர் தான் கிங் ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையா. கடந்த 2016ஆம் ஆண்டு அவர் இந்தியாவில் இருந்து தப்பித்து தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்து இருக்கிறார்.
கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டன. அப்போது ஆர்சிபி அணியின் உரிமையாளராக இருந்த விஜய் மல்லையா தான். விராட் கோலி, ஏபிடிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட வீரர்களை ஆர்சிபி அணிக்கு வாங்கி அணியை வலுப்படுத்தினார். பின்னர் விஜய் மல்லையா மீது நிதி மோசடி குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் நாட்டை விட்டு தப்பி சென்றார், ஆர்சிபி அணியும் அவர் கைவிட்டு போனது. தற்போது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனம் தான் ஆர்சிபி உரிமையாளராக இருக்கிறது.


Click it and Unblock the Notifications