தமிழ்நாட்டில் சென்னை தாண்டி இப்போது பிற மாவட்டங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மட்டும் அல்லாமல் வெளி மாநிலத்தவர்களும் தற்போது தமிழ்நாட்டின் 2ஆம் தர நகரங்களின் ரியல் எஸ்டேட்டில் அதிகப்படியாக முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் தமிழ்நாட்டில் நிலம் அல்லது வீடு வாங்க சிறந்த 2ஆம் தர நகரம் எது என ஆய்வை மேற் கொண்டதில் சுமார் 480 பேர் பங்குபெற்று வாக்களித்த நிலையில் அதிகப்படியானோர் தேர்வு செய்யும் நகரம் நம்ம கோயம்புத்தூர் தான்.

தமிழ்நாட்டு மக்கள் இந்த வாக்கெடுப்பில் சுமார் 63 சதவீதம் பேர் கோயம்புத்தூர் தான் நிலம் அல்லது வீடு வாங்க சிறந்த 2ஆம் தர நகரம் என தேர்வு செய்துள்ளனர். கோயம்புத்தூர்-ஐ தொடர்ந்து திருச்சி 19 சதவீத வாக்குகளையும், மதுரை 10 சதவீத வாக்குகளையும், கிருஷ்ணகிரி 8 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.
ஒரு வீடு வாங்குவது என்பது இந்தியாவில் பெரும்பாலான மக்களின் கனவு, அதிலும் குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் வாழ்நாள் கனவு. சொந்த வீடு என்பது பாதுகாப்பு, மன நிறைவு, சமூக அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால், முதல் வீடு வாங்குவது ஒரு சவாலான விஷயம், பெரிய முதலீடு தேவைப்படுவது மட்டுமல்லாமல், பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முக்கியமான விஷயம்: முதல் வீடு வாங்குவதற்கு முன், நீங்கள் ஒரு நீண்ட கால கடனை ஒவ்வொரு மாதமும் செலுத்த தயாராக உள்ளீர்களா என்பதை நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். உங்கள் நிதி நிலைமையை மதிப்பீடு செய்து, நீங்கள் வாங்கக்கூடிய வீட்டின் விலையை தீர்மானிக்க வேண்டும். மேலும், உங்கள் கடன் திறனையும் கணக்கிட வேண்டும், இதற்காக உங்கள் சிபில் ஸ்கோரை அறிந்து கொள்ள வேண்டும்.
வீடு தேர்வு செய்தல் : உங்கள் தேவைகள் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ற வீட்டைத் தேர்வு செய்ய வேண்டும். வீட்டின் அளவு, வசதிகள், இருப்பிடம் மற்றும் விலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், வீட்டின் கட்டமைப்பு மற்றும் சட்டப்பூர்வ ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.
வீட்டு கடன் பெறுதல் : வீட்டு கடன் பெறுவது என்பது முதல் வீடு வாங்குவதில் ஒரு முக்கியமான படியாகும், தற்போது பெரும்பாலான வங்கிகள் வீட்டுக் கடன்களை தாராளமாக கொடுப்பதால் வீட்டுக் கடன் வாங்குவதில் பெரிய பிரச்சனை ஏதும் இருக்காது.
வட்டி விகிதம் : வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீட்டு கடன்களை வழங்கினாலும் கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்வது நம்முடைய நிதி நிலைமை, வருமானம், வயது, கிரெடிட் ஸ்கோர் ஆகியவை தான். எனவே, உங்களுக்கு சிறந்த வட்டி விகிதம் மற்றும் கடனை திருப்பி செலுத்திவதில் எளிய விதிமுறைகளை வழங்கும் கடன் வழங்குநரைத் தேர்வு செய்வதும் முக்கியம்.
இது அனைத்தும் சரியாக இருப்பின், வங்கியில் விண்ணப்பித்த ஒரு சில நாட்களில் அதிகப்படியாக ஒரிரு வாரங்களில் கடன் கிடைத்துவிடும். இதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் வீடு நீண்ட கால அடிப்படையில் பல மடங்கு விலை உயர கூடியதாக இருக்க வேண்டும். இதற்காக தான் கோயம்புத்தூர், ஓசூர் போன்ற 2ஆம் தர நகரங்களில் வீடுகளை வாங்க வேண்டும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications