பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சொத்து உரிமையாளர்கள் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருக்கும் சொத்து உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சொத்து பத்திரத்தை பெற வேண்டுமெனில் மாநகராட்சி அலுவலகத்திற்கு தான் செல்ல வேண்டும். இவ்வாறு மக்கள் செல்லும் போது அதிகாரிகள் சரியாக பதில் அளிப்பதில்லை, பத்திரத்தை பெற அலைக்கழிக்கின்றனர் என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தான் ஆன்லைன் வாயிலாகவே இவற்றை பெற்று கொள்ளும் வசதியை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

online e-khata system என்ற பெயரில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த திட்டத்தில் பெங்களூருவை சேர்ந்த பல லட்சம் வீட்டு உரிமையாளர்கள் பயன்பெற இருக்கின்றனர். பெங்களூருவை சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து பத்திரங்களை பெறுவது, வரி செலுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக மாநகராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களிடம் உரிய சொத்து ஆவணம் இல்லாதவர்கள் https://BBMP.karnataka.gov.in/NewKhata என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று தங்களுடைய சொத்தின் மின்னணு சொத்து பத்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். மக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வராமல் தங்கள் வீட்டில் இருந்தபடியே தங்களுடைய சொத்து பத்திரங்களை ஆன்லைன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வீட்டு உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண், வீட்டின் விற்பனை அல்லது பதிவு பத்திரம், பத்திரத்தின் எண் மற்றும் வில்லங்க சான்றிதழ், சொத்தின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை அடுத்து அதிகாரிகள் ஆன்லைனிலேயே இந்த தகவல்களை சரி பார்த்து சொத்து பத்திரத்தை பிடிஎஃப் முறையில் அனுப்பி வைப்பார்களாம்.
இவ்வாறு ஆன்லைனில் பெறக்கூடிய சொத்து பத்திரம் அனைத்து இடங்களிலும் அதிகாரப்பூர்வ சொத்து பத்திரமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்தின் அளவு, அந்த சொத்து அமைந்திருக்கும் இடம், அது குடியிருப்பு பகுதியா அல்லது வணிக ரீதியாக கட்டிடங்கள் செயல்படும் பகுதியா என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெறும்.
சொத்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சொத்து வரி வசூல் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஆன்லைனில் சொத்து ஆவணங்களை பெறும் வசதியை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications