இன்றும் சரி, அன்றும் சரி சொந்த வீடு என்பது மக்களின் வாழ்வின் பெரும் கனவாகவே உள்ளது. வங்கியில் வீட்டுக் கடன் எளிதாகக் கிடைப்பதால் வீடு வாங்குவது தற்போது எளிதாகிவிட்டாலும், கடனை நீண்ட கால அடிப்படையில் செலுத்துவது என்பது பெரும் சுமையாகவே உள்ளது.
இதேவேளையில், கடந்த 5 வருடத்தில் சொந்த வீடு வாங்குவது என்பது வீண் செலவு, வாடகை வீடு தான் பெஸ்ட் என்ற பிரச்சாரம் பரவலாக உள்ளது. ஆனால் மறுமுனையில் எப்போதும் இல்லாத வகையில் பெரும் பணக்காரர்கள் ஆடம்பர வீடுகளை வாங்கிக் குவித்து வருகிறார்கள்.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் விற்பனைக்கு வரும் வீடுகளின் சப்ளை, டிமாண்ட் பிரச்சனை மிகவும் பெரியதாக இருக்கும் வேளையில் விலை உயரும் அபாயம் தற்போது உருவாகியுள்ளது.
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நடத்தப்பட்ட ஆய்வில் வீடுகளின் சராசரி விலைகள் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் 7% அதிகரிக்கும் என ராய்ட்டர்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கணிக்கப்பட்டு உள்ளது.
7 சதவீதம் உயர்வு எனில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டின் விலை 1.07 கோடிக்கு விற்கப்படும், இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்..? இந்தியாவில் அனைத்து பெரு நகரங்களிலும் தற்போது ஆடம்பர சொகுசு வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்றும், மலிவு வீடுகளின் டிமாண்ட் குறைவாக இருப்பதாலும், அதன் சப்ளை குறைந்து விற்பனையும் குறையும் நிலை உருவாகியுள்ளது என்று இந்தக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
2022 மே முதல் 2023 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 2.5 சதவீதம் உயர்த்தியும், இந்திய ரியல் எஸ்டேட் துறை இக்காலகட்டத்தில் பாதிக்கவில்லை.
ரிசர்வ் வங்கியின் வீட்டு விலைக் குறியீடு அதாவது House Price Index தரவுகள் அடிப்படையில் 2023ஆம் ஆண்டில் வீடுகளின் விலைகள் 4.3% உயர்ந்துள்ளன. இது 2018ஆம் ஆண்டுக்குப் பின் பதிவான அதிகப்படியான விலை உயர்வாகும்.
எப்படியாவது வீடு வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குறைந்த வருவாய் மற்றும் வறுமை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் சுமையாகவே இருக்கும்.
ரியல் எஸ்டேட் துறையில் தற்போது பெரும் பணக்காரர்கள் அதிகப்படியான ஆடம்பர, சொகுசு வீடுகளை வாங்கி வரும் வேளையில், வீடு கட்டும் நிறுவனங்கள் ப்ரீமியம் திட்டங்களைத் தொடங்குவதில் கவனம் செலுத்துகின்றன. இதனால் மலிவு விலை, பட்ஜெட் விலை வீடுகளின் கட்டுமானங்கள், புதிய திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நினைத்தால் இந்த நிலை விரைவில் மாறும், ஆம் ஆர்பிஐ ரெப்போ விகிதத்தைக் குறைத்தால் கட்டாயம் லிவு விலை, பட்ஜெட் விலை வீடுகளுக்கான டிமாண்ட் அதிகரிக்கும். அதுவரையில் சொந்த வீடு வாங்குவோர் கூடுதல் விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications