அமராவதி, ஆந்திரா: ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமராவதி தலைநகரை கட்டமைக்கும் பணிகளை சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு தீவிர படுத்திருக்கும் நிலையில் அமராவதியை சுற்றி உள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் வேகமெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தன்னுடைய கனவுத்திட்டமான அமராவதி தலைநகர் திட்டத்தை கையில் எடுத்து அதற்கான பணிகளை வேகப்படுத்தி வருகிறார். இதன்படி ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி கட்டமைக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தீவிரப் படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக அமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கு முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அமராவதி தலைநகர திட்டம் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கே தொடங்கப்பட்ட ப்ராஜெக்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது இந்த ப்ராஜெக்டுகள் அனைத்தும் உயிர்பெற்று இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவன நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாயின் ஆந்திர மாநிலத்துக்கான தலைவராக செயல்படும் ரமண ராவ் தலைநகர் அமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பெருமளவிலான முதலீடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவித்தார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அமராவதி தலைநகரத்திற்கான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் இங்கே வந்த முதலீடுகள் அனைத்தும் ஹைதராபாத்துக்கு திரும்பி விட்டன. தற்போது மீண்டும் அவை ஆந்திராவை நோக்கி குறிப்பாக அமராவதி நோக்கி வர தொடங்கி இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
குறிப்பாக அமராவதி சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களுடைய கட்டுமான பணிகளை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துவது மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது, அலுவலகங்கள் கட்டுமான பணி என பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவுட்டர் ரிங் சாலை மற்றும் பைபாஸ் சாலை இருக்கக்கூடிய பகுதிகளில் எல்லாம் ரியல் எஸ்டேட் மேம்பாட்டினை காண முடிகிறது என தெரிவித்துள்ளார்.
அரசும் தன்னுடைய பங்கிற்கு கழிவுநீர் கால்வாய்களை அமைப்பது, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருவது என்பன உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் விஜயவாடா மற்றும் குண்டூர் இடைப்பட்ட பகுதியில் நிலங்களின் மதிப்பும் கடந்த ஆறு மாத காலத்தில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தடேபள்ளி, உண்டாவள்ளி, மங்களகிரி ஆகிய பகுதிகளில் அடுத்த ஓராண்டுக்குள் நிலங்களின் விலை பல மடங்கு உயரும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications