மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை மாதம் 23-ஆம் தேதி அன்று 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட், பல்வேறு துறைகளுக்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள், அவற்றின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஆகியவை பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். இந்திய ரியல் எஸ்டேட் துறை, தனது வளர்ச்சியை மேம்படுத்தவும், நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினைகளை சமாளிக்கவும், இந்த பட்ஜெட்டில் சீர்திருத்தங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
கார்ப்பரேட் வரிச் சலுகைகளை விரிவுபடுத்துவது முதல் கூடுதல் கட்டணம் திரும்பப் பெறுவது வரை எதிர்பார்ப்புகள் உள்ளன. வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான ரியல் எஸ்டேட் பங்குதாரர்களின் விருப்பப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கடனுக்கான வரி சலுகைகள்: வீட்டுக் கடன்களுக்கான வட்டி விலக்கு உச்சவரம்பை தற்போதைய ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்துவது, வீடு வாங்குவதற்கான செலவைக் குறைத்து, மக்கள் வீடு வாங்குவதை ஊக்குவிக்கும்.
நீண்டகால மூலதன லாபம் (Long-Term Capital Gain): ஒரு வீட்டை நீண்டகால மூலதன சொத்தாகக் கருதப்பட, அதை 24 மாதங்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டும். அதாவது, ஒரு வீட்டை வாங்கி 24 மாதங்களுக்குப் பிறகு விற்றால், அதிலிருந்து கிடைக்கும் லாபம் நீண்டகால மூலதன லாபமாக கருதப்படும்.
ஒரு வீட்டை 24 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வைத்திருந்து விற்றால், அதிலிருந்து கிடைக்கும் லாபம் குறுகியகால மூலதன லாபமாக கருதப்படும். ரியல் எஸ்டேட் துறையினர், இந்த காலத்தை 12 மாதங்களாக (1 ஆண்டு) குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
10% வரி விகிதம்: இந்திய அரசு, குடியுரிமை பெற்ற முதலீட்டாளர்களுக்கான ஈவுத்தொகை வரிவிதிப்பு விகிதத்தை 10% ஆக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கார்ப்பரேட் வரிச் சலுகைகள்: உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கார்ப்பரேட் வரிச் சலுகைகள், மற்ற நிறுவனங்கள், LLP-கள் மற்றும் தனிநபர்கள் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் சீரானதாகக் கொண்டு வர வேண்டும்.
ஒப்புதல் செயல்முறையை எளிதாக்குதல்: கட்டுமான பணிகளுக்கான ஒப்புதல்களைப் பெறுவதற்கான செயல்முறையை எளிமைப்படுத்தவும், தாமதங்களை குறைக்கவும், துறையின் திறனை அதிகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு: கட்டுமானப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது, மொத்தக் கட்டுமான செலவைக் குறைத்து, வீடுகளின் விலையைக் குறைக்கும். இதனால் சாமானிய மக்களின் வீடு வாங்கும் கனவு நினைவாகும்.
இதுபோன்ற ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்க்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படுமா என்பதைத் தெரிந்து கொள்ள நாம் ஜூலை 23-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


Click it and Unblock the Notifications