இந்தியாவின் உற்பத்தித் துறை, சேவைத் துறை, அன்னிய முதலீடுகள் ஆகியவை சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் அதே நேரத்தில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் இந்திய சந்தைக்கு மிகவும் சாதகமாக அமைந்தது.
இதன் காரணத்தினால் மும்பை பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில் கொரோனா தொற்றை 90 சதவீதம் வரையில் குணப்படுத்தக் கூடிய மருந்தை ஃபைசர் மற்றும் ஜெர்மன் கூட்டணி நிறுவனமான பயோஎன்டெர் எஸ்ஈ கண்டுபிடித்து ஆய்வில் வெற்றி அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது உலக நாடுகள் மத்தியில் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

சர்வதேச சந்தை முதல் இந்திய சந்தை வரை
இதனால் இந்திய சந்தையை மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளிலும் சிறப்பான வளர்ச்சி பதிவு செய்துள்ளது. இன்று காலையில் புதிய கொரோனா மருந்து எதிரொலியாக ஆசிய சந்தை சிறப்பான வர்த்தகத்தைப் பதிவு செய்த நிலையில் இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் அதிகமாக இருந்தது.
இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் மும்பை பங்குச்சந்தை துவங்கி முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் கணிப்பு
தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் கணித்ததைப் போலவே இன்று மீண்டும் சென்செக்ஸ் குறியீடு வரலாற்றிலேயே முதல் முறையாக 43,000 புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் மூலம் இந்தியாவின் நிலையற்ற சந்தை அளவீடான India VIX நிலையாக இருந்தது.

பிரேசில்
பிரேசில் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில், அந்நாட்டு அரசு சீன தடுப்பு மருந்தான Sinovac-ஐ பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பரிசோதனை செய்து வந்த நிலையில், நோயாளிகளுக்குப் பல விதமான பாதிப்புகள் ஏற்படவே பிரேசில் சுகாதார அமைப்புப் பரிசோதனை செய்வதைத் தடை செய்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே ஃபைசர் நிறுவனத்தின் புதிய தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பு வெளியான காரணத்தால் சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பைத் தடுக்கப்பட்டது.

பெடரல் வங்கி
அமெரிக்காவின் பெடரல் வங்கி, அந்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போராடி வரும் நிலையில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்பட்டு வரும் உயர்வு பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த அவசர நிதியியல் கடன் திட்டத்தைப் பெடரல் வங்கி அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

வங்கி பங்குகள்
2வது காலாண்டில் இந்திய வங்கி மற்றும் நிதியியல் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப அளவீடுகள் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் அதேவேளையில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை மேம்பட்டு வரும் காரணத்தால் வங்கி பங்குகள் மீதான டிமாண்ட் மற்றும் முதலீடுகள் அதிகரித்துள்ளது.

ஐடி மற்றும் டெலிகாம்
மேலும் இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஐடி மற்றும் டெலிகாம் நிறுவன பங்குகளை லாப நோக்கத்திற்காக அதிகளவில் விற்பனை செய்த நிலையில் சில இடங்களில் மும்பை பங்குச்சந்தை இன்று சரிவு அடைந்தது.

சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 42,597 புள்ளிகளில் முடிவடைந்த சென்செக்ஸ் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 42,959.25 புள்ளிகளில் துவங்கி அதிகப்படியாக 43,316.44 புள்ளிகளை அடைந்து புதிய சாதனையைப் படைத்தது.
மேலும் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 680.22 புள்ளிகள் உயர்ந்து 43,277.65 புள்ளிகளை அடைந்துள்ளது.

நிஃப்டி
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 12,556.40 புள்ளிகளில் துவங்கிய சென்செக்ஸ் இன்று அதிகப்படியாக 12,643.90 புள்ளிகளை அடைந்துள்ளது.
வர்த்தக முடிவில் 170.05 புள்ளிகள் உயர்ந்து 12,631.10 புள்ளிகளைச் சென்செக்ஸ் அடைந்துள்ளது.