ரெசிஷன் அச்சம் வேலைவாய்ப்பு சந்தையை ஆட்டிப்படைத்து வரும் நிலையில் 2022 ஆம் ஆண்டு முதல் டெக் துறையில் மட்டும் சுமார் 300000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. பெரிய டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் வேளையில் பிற டெக் நிறுவனங்கள் கேம்பஸ் பிளேஸ்மென்ட்-ஐ குறைத்து வருகிறது, தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளை தாமதமாக பணியில் சேர்த்து வருகிறது.
அனைத்தையும் தாண்டி பெரிய டெக் நிறுவனங்கள் முதல் சிறிய டெக் நிறுவனங்கள் வரையில் ஊழியர்களுக்கான டிரைனிங் மற்றும் ஸ்கில்லிங் செலவுகளை குறைத்துள்ளது. இதற்கிடையில் செயற்கை நுண்ணறிவு கூடுதல் அச்சத்தை வேலைவாய்ப்பு சந்தையில் உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் டிரைனிங் மற்றும் ஸ்கில்லிங் செலவுகளை குறைத்தது, செயற்கை நுண்ணறிவு துறையின் எழுச்சி ஆகியவை பிரஷ்ஷர்கள் மற்றும் low skilled labour அதாவது திறன் குறைவாக தேவைப்படும் ஊழியர்கள் புதிய வேலைவாயப்பை பெறுவது கடினமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பல முக்கியமான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முன்னணி கல்லூரிகளில் கேம்பஸ் பிளேஸ்மென்ட் எண்ணிக்கை 25 சதவீதம் வரையில் குறைந்துள்ளது, இது மட்டும் அல்லாமல் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே கேம்பஸ் பிளேஸ்மென்ட்-க்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வருட கேம்பஸ் பிளேஸ்மென்ட் சீசன் முழுவதும் இதே நிலை தான் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, இதற்கான காரணம் ஊழியர்களின் டிரைனிங் மற்றும் ஸ்கில்லிங் செலவுகளை குறைத்தது தான்.
ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பிரஷ்ஷர்கள், அனுபவமுள்ள ஊழியர்களை நிறுவன பணியில் சேர்ப்பது மிகவும் தாமதமாகி வரும் வேளையில், அமெரிக்க - ஐரோப்பிய சந்தையில் புதிய திட்டங்கள் கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை உருவாகியிருக்கும் வேளையில், கூடுதலாக தாமதம் அல்லது பணியில் சேர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொதுவாக டெக் நிறுவனங்கள் பிரஷ்ஷர்களை தான் தேடி தேடி அதிகளவில் சேர்க்கும், ஆனால் தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறது. இதனால் கல்லூரி படிப்பை முடித்து வரும் பல கோடி பட்டதாரிகளுக்கு இந்த வருடம் வேலைவாய்ப்புகளை பெறுவது என்பது பெரும் சுமையாக மாறக்கூடும்.
இதேபோல் செயற்கை நுண்ணறிவு-இன் எழுச்சி இந்தியாவில் பல அடிப்படை, ஆரம்பக்கட்ட பணிகளை நீக்கிவிடும் என்ற அச்சம் அனைத்து துறையிலும் உள்ளது. குறிப்பாக சப்போர்ட் துறையில் இருக்கும் பணிகளுக்கு கட்டாயம் ஆபத்து உள்ளது, உதாரணமாக சேட் சப்போர்ட் பணியில் இருப்பவர்களுக்கு கட்டாயம் செயற்கை நுண்ணறிவு மூலம் ஆபத்து உள்ளது.


Click it and Unblock the Notifications